
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகள், ‘பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்’ என தீர்மானம் கொண்டுவந்தனர். அந்த தீர்மானங்களையெல்லாம் ஜகதீப் தன்கர் நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. உடனே அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சபை மீண்டும் கூடியதும், ‘நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவந்தன. இதையடுத்து, ‘நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும்’ என தீர்மானத்தை ஏற்று மாநிலங்களவை பொதுச் செயலாளருக்கு தன்கர் உத்தரவிட்டார்.
தன்கரின் திடீர் ராஜினாமா!
பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், ஜெகதீப் தன்கர். இதுகுறித்து அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், ‘குடியரசுத் தலைவர் அவர்களே, உடல் நலனுக்கு முன்னுரிமை அளித்து மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவதற்காக, அரசியலமைப்பின் 67(a) பிரிவின் கீழ் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவியை இதன்மூலம் நான் ராஜினாமா செய்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு பின்னால் வேறு பல காரணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
ராஜினாமா பின்னணி!
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த 2022-ல் துணை குடியரசுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் 2027-ல்தான் முடிவடைகிறது. ஆனால், திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். இதற்கு முன்பு துணை குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன் இப்படி பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்தார்கள். ஆனால் அவர்கள் குடியரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக அப்படி முடிவு எடுத்தனர். ஆனால் ஜகதீப் தன்கர் விவகாரத்தில் அரசியல் அழுத்தம்தான் காரணம்.

அதாவது நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதற்கான தீர்மானத்தையும் மக்களவையில் கொண்டுவர திட்டமிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும் தீர்மானம் கொண்டுவந்தன. அதற்கு தன்கர் ஒப்புதல் வழங்கிவிட்டார். இதனால் ஆளும்தரப்பு தாங்கள் செய்ய நினைத்ததை செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் என தக்கர் மீது கடுப்பாகிவிட்டனர். இதையடுத்து அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. எனவேதான் அவர் ராஜினாமா செய்துவிட்டார்” என்றனர்.
தன்கரின் அரசியல் பயணம்!
ஜகதீப் தன்கரின் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “ஜகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞராக இருந்தவர் ஜனதா கட்சியில் இணைந்தார். பிறகு 1991-ல் காங்கிரஸ் சென்றார். அங்கிருந்து 2003-ல் பா.ஜ.க-வில் இணைந்தார். 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஜகதீப் தன்கருக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவியது.
பிறகு 2022-ல் துணை குடியரசுத் தலைவர் ஆனார். மாநிலங்களவையில் அரசியல் சார்புடன் நடந்துகொள்கிறார் என அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதேநேரத்தில் சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை எம்.பி-யான ஜெயா பச்சனின் பெயரை தவறாக அழைத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கேவை விமர்சனம் செய்தது, உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக கருது கூறியது என அவர் மீது ஏராளமான சர்ச்சைகள் இருக்கிறது” என்றனர்.

இவ்வாறு ஜெகதீப் தன்கரின் திடீர் பதவி விலகல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. இதற்கிடையில், ‘துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய ஜெகதீப் தன்கர், எங்கே போனார்.. அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலுமே இல்லையே? என கபில் சிபல் கேள்வி எழுப்பி இருந்தார். இதேபோல் பல தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மாநிலங்களவையின் தலைவர் என்ற முறையில் ஜெகதீப் தன்கருக்கு பாரம்பரிய முறைப்படியான பிரிவு உபசார நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை என்பது தலைவர்களின் கேள்விக்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது.
அடுத்த துணை ஜனதிபதி யார்?
இந்தசூழலில் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். மேலும் ஆவணங்கள் ஆகஸ்ட் 22 அன்று பரிசீலிக்கப்படும். ஆளும் கூட்டணியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரத்தை பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அங்கீகாரம் அளித்துள்ளது.

வேட்பாளர்கள் பட்டியலில், ‘மாநிலங்களவை துணைத் தலைவர், ஐக்கிய ஜனதா தள எம்.பியுமான ஹரிவன்ஷ் நாராயண் சிங்; டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா; ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரும், உ.பி மூத்த பா.ஜ.க தலைவருமான மனோஜ் சின்ஹா; குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்; வேளாண் இணையமைச்சரும், முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூரின் மகனுமான ராம் நாத் தாக்கூர்; மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா’ ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.
ஆனால் இவை அனைத்தும் ஊகங்கள்தான். கடந்த காலத்தைப் போலவே பா.ஜ.க ஆச்சரியமான தேர்வை முன்வைக்குமா அல்லது இந்த பட்டியலில் இருப்பவர்களை கொண்டுவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேநேரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 66-வது பிரிவின்படி, துணை ஜனாதிபதி தேர்தல் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் குழுவால் நடத்தப்படுகிறது. ரகசிய வாக்கெடுப்பு மூலம், ஒற்றை மாற்றத்தக்க வாக்கு முறையில் தேர்தல் நடைபெறும். தற்போது, மொத்தம் 782 உறுப்பினர்கள் உள்ளனர். வெற்றி பெற 394 வாக்குகள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணியில் 422 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு என்.டி.ஏ. கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், அவர்களின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாக உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல் இந்திய அரசியலில் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. என்.டி.ஏ-வின் வேட்பாளர் தேர்வு, பீகார், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களை மனதில் கொண்டு மேற்கொள்ளப்படும் என்பதால் அரசியல்களம் சூடாகியிருக்கிறது!