
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
சீரியல் நடிகர் பரத் தலைமையிலான சின்னத்திரை வெற்றி அணிக்கு இந்த தேர்தலில் அபார வெற்றி கிடைத்திருக்கிறது.
தலைவர், செயலாளர், பொருளாளர், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என வெற்றி பெற்ற அத்தனை பேரும் சின்னத்திரை வெற்றி அணியைச் சேர்ந்தவர்கள்தான்.
தேர்தல் சமயத்தில் நடிகை ரவீனாவுக்கு ஓட்டு மறுக்கப்பட்ட விஷயம் பெரும் சர்ச்சையானது.
இது தொடர்பாகவும், சங்கத்தின் புதிய செயல்பாடுகள் குறித்த திட்டங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள, புதிதாக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நடிகர் நவீந்தரை பேட்டி கண்டோம்.
இதுதான் முதல் முறை
நவீந்தர் பேசும்போது, “ரொம்ப சந்தோஷமா இருக்கு. அபார வெற்றி எங்களுடைய அணிக்கு வந்திருக்கு. ஒரே அணியைச் சேர்ந்த அத்தனை நபர்களும் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இதுதான் முதல் முறை.
அதுபோல, இதுவரைக்கு பொருளாளர் பதவியில் ஒரு பெண் இருந்தது கிடையாது.
இப்போ கற்பகவள்ளி அக்கா வந்திருக்காங்க. ரொம்பவே சரியா அத்தனை கணக்குகளை இப்போதே குறிச்சு வச்சுக்கத் தொடங்கியிருக்காங்க,” எனத் தொடர்ந்தவர், “பொறுப்புக்கு வந்ததும் எங்களுடைய அணி சில விஷயங்களை நடைமுறைப்படுத்தணும்னு சில குறிக்கோள்கள் வச்சிருக்கோம்.

எங்களுடைய சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாமலேயே நிறைய பேர் நடிச்சிட்டு இருக்காங்க.
இனிமேல், சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே நடிக்க முடியும்னு ஒரு கட்டாயம் கொண்டுவரப்படும்.
ஒரு தயாரிப்பாளர் புதுமுக நடிகர்களை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினால், அதற்கும் நாங்க ஒத்துழைப்பு கொடுப்போம்.
ஆனா, முதல் வேலையாக அவர்களையும் சங்கத்தில் உறுப்பினராக இணைச்சிடணும்.
சங்கத்தில் இருக்கிற நடிகர்கள் பலரும் வேலையில்லாமல் இருக்காங்க. முதன்மை பாத்திரங்களைத் தாண்டி சீரியலில் பல துணை நடிகர் கேரக்டர்கள் வரும்.
அதுல உறுப்பினர்களை நடிக்க வைக்கலாம். இதைச் செய்வதற்கு சேனலும், தயாரிப்பு நிறுவனமும் தயாராகதான் இருக்காங்க.
அப்படியான ஆதரவை நாங்க நிச்சயமாகக் கொடுப்போம்! உறுப்பினர்கள் பிரச்னைன்னு எப்போ தொடர்பு கொண்டாலும், அவர்களுக்காக உடனடியாக களத்திற்குச் சென்று நிற்போம்.

வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு இனி மாதந்தோறும் உரிமைத்தொகை கொடுக்கலாம்னு திட்டமிட்டிருக்கோம்.
இப்படியான விஷயங்களைத் தாண்டி கல்வி, மருத்துவம்னு உறுப்பினர்களாக இருக்கும் நடிகர்களின் குடும்பத்திற்கு பல வசதிகளைச் செய்து தரவும் திட்டமிட்டிருக்கோம்,” என்று விளக்கியவரிடம் நடிகை ரவீனாவுக்கு ஓட்டு மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கேட்டோம்.
ரவீனா விஷயத்தில் நடந்தது என்ன?
கேள்விக்கு பதில் கொடுத்த நவீந்தர், “அது கடந்த நிர்வாகத்தில் நிகழ்ந்த விஷயம். அதுக்கும் இந்த நிர்வாகத்துக்கும் தொடர்பு கிடையாது.
அவங்க நடிக்கக் கூடாது, தேர்தலில் நிக்கக் கூடாதுனு ரெட் கார்ட் கொடுத்தது கடந்த நிர்வாகத்தில் நடந்த விஷயம்தான்.
அப்போ நடந்த தவறுக்கு, இந்த நிர்வாகம் எப்படிப் பொறுப்பாகும்?
இதற்குப் பிறகுதான் நாங்க தலையிட்டு என்ன பிரச்னை நடந்திருக்கு, எதனால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டிருக்கு, எதனால் தேர்தலில் நிக்கிறதுக்கும் ஓட்டுப் போடுறதுக்கும் உரிமை அவங்களுக்கு மறுக்கப்பட்டுச்சுனு பார்க்கணும்.

மற்றபடி, எங்க நிர்வாகத்திற்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ரவீனா தங்கச்சி எனக்குமே முன்பிருந்தே பழக்கம்தான். தேர்தல் நேரத்தில் தங்கச்சி என்கிட்டே ‘உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு’னு சொன்னாங்க. ஏன் தங்கச்சி அப்படிச் சொன்னாங்கனு தெரியல. இனிதான் என்ன விஷயம் நடந்ததுனு நான் விசாரிக்கணும்,” எனக் கூறி முடித்துக்கொண்டார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…