
Doctor Vikatan: வாரத்தில் 6 நாள்கள் வேலைக்குச் செல்கிறேன். விடுமுறை நாள்களில் மதியம் சாப்பிட்ட பிறகு சற்று நேரம் தூங்குவது என் வழக்கம். அப்படித் தூங்கி எழுந்ததும் உடனே பசிக்கிறது. உடனே மறுபடி ஏதாவது சாப்பிடுகிறேன். அப்படி பசித்தால் சாப்பிடலாமா, இப்படி சாப்பிடுவதும் தூங்குவதும் சரிதானா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.
விடுமுறை நாள்களில் மட்டும்தான் இப்படி நடக்கிறது என்றால் அதில் எந்தத் தவறும் இல்லை. விடுமுறை என்பதே ஓய்வெடுப்பதற்குத்தான். அந்த நாளில் நன்றாகச் சாப்பிடுவதும், போதுமான அளவு ஓய்வெடுப்பதும் தவறில்லை.
சிலருக்கு எப்போதும் பசித்துக்கொண்டே இருக்கும். எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதை ‘பின்ஜ் ஈட்டிங்’ (Binge eating) என்று சொல்வார்கள்.
சிலருக்கு எப்போதும் பசித்துக்கொண்டே இருக்கும். எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதை ‘பின்ஜ் ஈட்டிங்’ (Binge eating) என்று சொல்வார்கள்.
அதீத உடல்பருமன் காரணமாக ஏற்பட்டதாக இருக்கலாம். சிலர் ஸ்ட்ரெஸ் காரணமாக எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதை ‘எமோஷனல் ஈட்டிங்’ (Emotional eating) என்று சொல்வோம்.
இவர்கள் எல்லாம் மருத்துவரை அணுகி, என்ன பிரச்னை என்று பார்த்து சிகிச்சை எடுக்க வேண்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு, குறிப்பாக, ஹைப்பர் தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிகம் பசிக்கும். அதிகம் சாப்பிட்டாலும் அவர்கள் பார்ப்பதற்கு ஒல்லியாகவே இருப்பார்கள். இது ஒருவிதமான மருத்துவ நிலை. இதற்கும் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.
இதையெல்லாம் தாண்டி, வார இறுதியில் ஏதோ சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களது மனம் சம்பந்தப்பட்டது. அதாவது வேலைகள் இல்லாமல், ஸ்ட்ரெஸ் இல்லாமல் வீட்டில் ஓய்வாக இருப்பதால், பிடித்ததைச் சாப்பிட நினைக்கும் அந்த உணர்வு வேறு.
ரொம்பவும் தீவிரமாக டயட்டை பின்பற்றுவோருக்கு, வாரத்தில் ஒருநாள் ‘சீட் டே’ (cheat day) என்ற பெயரில் விருப்பமான உணவுகளைச் சாப்பிட அனுமதி கொடுக்கப்படும். அப்படிச் சாப்பிட்டாலும், அளவுக்கதிமாக ஜங்க் உணவுகளைச் சாப்பிடாமல், கலோரிகள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விடுமுறை நாள்களில் பிடித்ததைச் சாப்பிட நினைத்தாலும், ஆரோக்கியமான உணவுகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். சுண்டல், கொழுக்கட்டை போன்றவை சிறந்த சாய்ஸ். எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கவும். சாப்பிட்டு சிறிது நேரம் தூங்குவது அடுத்த வார ஓட்டத்துக்கு உங்கள் உடலையும் மனதையும் தயார்படுத்தும். ஆனால், சாப்பிட்டதும் தூக்கம் என்ற இந்தப் பழக்கம் தினசரி தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.