• August 13, 2025
  • NewsEditor
  • 0

நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் 111 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது பாம்பன் ரயில் பாலம். இந்த பாலத்தின் ஊடாக கப்பல்கள் செல்லும் வகையில் திறந்து மூட கூடிய வகையில் ஹெர்ஷர் தூக்குபாலமும் அமைந்திருந்தது. பாம்பன் கடல் பகுதியில் நிலவும் அதீத உப்பு காற்றினால் இந்த தூக்குபாலம் அவ்வப்போது பாதிப்படைந்து ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

புதிய பாம்பன் ரயில் பாலம்

இதனால் பாம்பன் கடலில் புதிதாக ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து ரயில்வே துறையின் கட்டுமான அமைப்பான ரயில் விகாஷ் நிகம் லிமிட்டெட் கண்காணிப்பின் கீழ் ரூ.550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள் இந்த பாலத்தை கடந்து செல்லும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமும் இதில் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தினை பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது பிரதமர் முன்னிலையில் திறக்கப்பட்ட தூக்கு பாலம் மீண்டும் இறக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டது.

மோடி - புதிய பாம்பன் பாலம்
மோடி – புதிய பாம்பன் பாலம்

இதன் பின் அந்த தூக்கு பாலம் சீர் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கியது. இதே போல் கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் இதே போன்று செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டு ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

காத்திருக்கும் ரயில் பயணிகள்

இதனை தொடர்ந்து கடந்த வாரத்தில் தூக்கு பாலத்தின் தண்டவாள பகுதியினை மேலே தூக்கும் இரும்பு வடங்கள் சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று பகலில் தூக்கு பாலத்தினை மேலே தூக்கி மீண்டும் கீழே இறக்கப்பட்டது. அப்போது தூக்குப்பாலத்தின் தண்டவாள பகுதி மற்ற பகுதியில் உள்ள தண்டவாளத்துடன் முழுமையாக இணையவில்லை. இதனால் ரயில் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் மதுரயில் இருந்து ராமேஸ்வரம் வந்த ரயில் மண்டபத்திலும், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற சிறப்பு ரயில், மாலை 4 மணிக்கு புறப்பட்ட தாம்பரம் ரயில் ஆகியன பாம்பன் ரயில் நிலையம் அருகே உள்ள அக்காள்மடம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதே போல் மாலை 5.50 மணிக்கு சென்னை செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதிலும் தடங்கல் ஏற்பட்டது. இதனால் இந்த ரயில்களில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள்

இதன் பின் பாம்பன் ரயில் பால பொறியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுதினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தண்டவாளங்கள் சீராக பொருந்தின. இதையடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரயில்கள் இரவு 8.15 மணியில் இருந்து அடுத்தடுத்து செல்ல துவங்கின. இதனால் ரயில் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *