
பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலைப் படை (Balochistan Liberation Army (BLA)) என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது அமெரிக்கா.
மஜீத் படைப்பிரிவு என்ற அமைப்பும் இதில் அடங்கும். இந்த அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு (FTO) மற்றும் உலகளாவிய பயங்கரவாதி (SDGT) ஆகிய பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு முதல் மஜீத் படைப்பிரிவு மற்றும் சில குழுக்கள் நடத்திய தாக்குதல்களுக்கு பலுசிஸ்தான் விடுதலைப்படை பொறுப்பேற்று உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்திருக்கிறார்.
பலுசிஸ்தான் விடுதலைப் படை நீண்ட நாட்களாக அமெரிக்காவால் ஆராயப்பட்டு வந்தது. 2019 முதல் தற்கொலை குண்டுவெடிப்புகள் மற்றும் உயர்மட்ட நபர்கள் மீதான தாக்குதல்கள் உட்பட பல தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த மார்ச் 2025ல் பலுசிஸ்தான் ராணுவம் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கடத்தி 300 பயணிகளை பணயக் கைதிகளாக வைத்திருந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் 31 பயணிகள் உயிரிழந்தனர்.
இது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பாகிஸ்தான் அரசின் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் விடுதலைப்படையின் கோரிக்கை
BLA 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டுமென்பதே அவர்களின் உச்சபட்ச கோரிக்கை.
1948ல் பலுசிஸ்தான் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டதாகவும், இங்குள்ள எண்ணெய், கனிம வளங்கள் பாகிஸ்தான் அரசால் சுரண்டப்படுவதாகவும் குற்றம்சாட்டி வரும் இந்த அமைப்பு, பலூசிஸ்தானின் சில மாவட்டங்களை ஆட்சி செய்வதாக அறிவித்திருக்கிறது.
அமெரிக்கா பாகிஸ்தான் நெருக்கம்!
கடந்த ஜூலை 31, 2025ல் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பாகிஸ்தானில் அமெரிக்கா உதவியுடன் எண்ணெய் வளங்களை ஆராயவும் மேம்படுத்தவும் உடன்படிக்கை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிக எண்ணெய், கனிம வளம் கொண்ட பலுசிஸ்தானில் இந்த ஆய்வுகள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நெருக்கம் அதிகரித்திருக்கிறது. “இந்தியா பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை ஏற்படலாம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதையும் நினைவில் கொள்ளலாம்.