
தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நேற்றைய விசாரணையில், “டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உடனடியாக ஒரு தெருநாய் விடாமல் அனைத்தையும் பிடிக்க வேண்டும். இதற்காக சிறப்புப் படை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம்” என டெல்லி அரசுக்கு 8 வாரங்கள் காலக்கெடு விதித்தது உச்ச நீதிமன்றம்.
மேலும், “பிடிக்கப்படும் நாய்களை காப்பகங்களில் அடைத்து, கருத்தடை ஊசி போட்டுப் பராமரிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டது.
பீட்டா குற்றச்சாட்டு
இதற்கு எதிர்வினையாற்றிய பீட்டா (People for the Ethical Treatment of Animals) அமைப்பு, நாய்களை இடம்பெயர்த்து சிறையில் அடைப்பது அறிவியல் பூர்வமானது அல்ல என்றும், இது மிகப்பெரிய அளவில் நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அறிக்கை வெளியிட்டது.
அதோடு, டெல்லியில் இவ்வளவு நாய்கள் திரிவதற்கு டெல்லி அரசு முறையாக கருத்தடை திட்டத்தைச் செயல்படுத்தாததே கரணம் என்றும் குற்றம்சாட்டியது.
மேனகா காந்தி கேள்வி
அதேபோல், விலங்குகள் நல ஆர்வலரும், பா.ஜ.க முன்னாள் எம்.பி-யுமான மேனகா காந்தி, “இது கோபத்தில் ஒருவர் வழங்கிய மிகவும் விசித்திரமான தீர்ப்பு. லட்சக்கணக்கான நாய்களுக்குக் காப்பகங்கள் அமைப்பதற்கு ரூ.15,000 கோடி ஆகும். டெல்லி அரசிடம் ரூ.15,000 கோடி இருக்கிறதா?” என்று கேள்வியெழுப்பினார்.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தெருக்களிலிருந்து நாய்களை அகற்றுவது இரக்கமற்ற செயல் எனத் தெருநாய்கள் நலனுக்கு ஆதரவுக் குரல் தெரிவித்திருக்கிறார்.
The SC’s directive to remove all stray dogs from Delhi-NCR is a step back from decades of humane, science-backed policy.
These voiceless souls are not “problems” to be erased.
Shelters, sterilisation, vaccination & community care can keep streets safe – without cruelty.Blanket…
— Rahul Gandhi (@RahulGandhi) August 12, 2025
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி, “டெல்லியிலிருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவானது, பல தசாப்தங்களாக மனிதாபிமான மற்றும் அறிவியல் ரீதியாக உருவாக்கப்பட்ட நம் கொள்கையிலிருந்து ஓரடி பின்வாங்குவதாகும்.
இந்த வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்படவேண்டிய பிரச்னை அல்ல.
அவற்றைக் கொடுமைப்படுத்தாமல் தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி, சமூக பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
தெருக்களிலிருந்து அவற்றை அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வையுடையது, இரக்கமற்றது.
பொதுமக்களின் பாதுகாப்பும் விலங்குகளின் நலனும் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய முடியும்” என்று பதிவிட்டிருக்கிறார்.