• August 12, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு நடிப்பிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீரா ரெட்டி தற்போது மீண்டும் நடிப்புக்குத் தயாராகியிருக்கிறார். சிம்னி என்ற படத்தின் மூலம் அவர் பாலிவுட்டில் மீண்டும் களமிறங்குகிறார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து சமீரா ரெட்டி அளித்த பேட்டியில்,” ஒரு வருடத்திற்கு முன்பு நான் நடித்த டெஸ் என்ற படத்தை என் மகன் பார்த்தான். அதனைப் பார்த்துவிட்டு ஏன் அம்மா மீண்டும் நடிக்கவில்லை என்று என்னிடம் கேட்டான்.

குடும்பத்துடன் சமீரா

உடனே நான் உன்னையும், உன் சகோதரியையும் கவனித்துக்கொள்வதற்காக என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று சொன்னேன். உடனே மீண்டும் நடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று என்னிடம் அவன் கேட்டுக்கொண்டான். அவன் சொன்ன பிறகுதான் மீண்டும் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது பதட்டமாக இருந்தது.

அங்கிருந்தவர்கள் உங்களுக்கு வயதாகிவிட்டது என்று சொன்னார்கள். நான் என்ன வயதாகிவிட்டது என்று திரும்ப கேட்டேன். ஆனால் இயக்குநர் `ஆக்‌ஷன்’ என்று சொன்னவுடன் என்னுள் உறங்கிக்கொண்டிருந்த நடிகர் மீண்டும் எழுந்துவிட்டான். இயக்குநர் சொன்னபடி நடித்தேன்” என்று சொல்லும் சமீரா ரெட்டிக்கு தற்போது 46 வயது. அவர் உடல் எடை பிரச்னையால் அவதிப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

சமீரா ரெட்டி ஆரம்பத்தில் மும்பையில் வசித்து வந்தார். மும்பை வாழ்க்கை பிடிக்காமல் கொரோனா காலத்தில் மும்பையை காலி செய்துவிட்டு குடும்பத்தோடு கோவாவிற்கு சென்றுவிட்டார். கடந்த 5 ஆண்டுகளாக கோவாவில் வசித்து வருகிறார். கோவா சென்றது குறித்து சமீரா ரெட்டி அளித்த பேட்டியில்,”என் குடும்பத்தோடு 2020ம் ஆண்டு கோவாவிற்கு சென்றுவிட்டேன். அங்கு சென்ற பிறகு மன அமைதி ஏற்பட்டுள்ளது. எனது வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கோவாவில் வசிப்பது மிகவும் வசதியாக இருக்கிறது. கோவா வாழ்க்கை எனது மனநிலையில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியது. கோவா என்னை பெரிய அளவில் மாற்றிவிட்டது. குறிப்பாக மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒரு தாயாக என்னையும், என் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதுதான் முக்கியம். அனைவரும் என்னிடம் ஏன் கோவாவிற்கு சென்றீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கும், என் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும் இதை செய்தேன். மன அமைதிக்காகவே கோவாவிற்கு வந்தேன்”என்று தெரிவித்துள்ளார். தனது கோவா வாழ்க்கை குறித்து அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை சமீரா ரெட்டி பகிர்ந்து வருகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *