
புதுடெல்லி: திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டது.
இதன்படி, பல சிக்கலான நடைமுறைகள் நீக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025 கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இதுகுறித்து ஆராய பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையில் தேர்வுக்கு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதனிடையே, ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதா கடந்த வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டது.