• August 12, 2025
  • NewsEditor
  • 0

விதவிதமாக இனிப்பு சாப்பிடுவது மட்டும்தான் நீரிழிவு நோய்க்கு முக்கியமானக் காரணம் என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். நீரிழிவு நோய்க்கு, உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் போதுமான அளவில் சுரக்காமல் போவது அல்லது சரியாக செயல்படாமல் இருப்பதுதான் முக்கியமானக் காரணங்கள்.

இவைத்தவிர, தவறான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், மரபணு என வேறு பல காரணங்களும் இதற்கு உண்டு. ஆனால், ‘நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்’ பயன்படுத்துவதால் டைப் 2 நீரிழிவு அதிகரிக்கிறது என்று நியூயார்க்கில் உள்ள மவுன்ட் சினாய் மருத்துவமனையில் ஆராய்ச்சி செய்து கண்டறியப்பட்டுள்ளது. இது உண்மைதானா என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.

நீரிழிவு

”நீரிழிவில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு. முதல் வகை டைப் 1 நீரிழிவு. இதில் இன்சுலின் உற்பத்தியே இருக்காது. பொதுவாக குழந்தைகளுக்கே இது அதிகம் ஏற்படும். மரபணு அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக இந்த டைப் ஒன்று நீரிழிவு ஏற்படலாம். நமது எதிர்ப்பு சக்தியே கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழித்துவிடுவதால் இந்த நோய் ஏற்படுகிறது.

டைப் 2 நீரிழிவு என்பது முப்பதிலிருந்து நாற்பது வயதுவரை உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. இன்சுலின் சரியாக உற்பத்தியாகியும், அது அதன் பணியைச் செய்யாமல் போவதால் ஏற்படுகிறது. இது ‘இன்சுலின் எதிர்ப்புநிலை’ என்று அழைக்கப்படுகிறது” என்றவர், நியூயார்க் ஆய்வுக்குறித்து விளக்க ஆரம்பித்தார்.

ரசாயனங்கள்
ரசாயனங்கள்

”நியூயார்க்கில் மவுன்ட் சினாய் மருத்துவனையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், கடந்த 2007-லிருந்து 65 ஆயிரம் பேரின் வாழ்வியல் முறையை தொடர்ந்து கவனித்து ஆய்வு செய்ததன் மூலம், ‘நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்’ பயன்படுத்துவதால் டைப் 2 நீரிழிவு வருவதற்கு 31% அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் உள்ள பெர் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருள்கள் ஆகும். இவற்றில் நீர்ப்புகாத, எண்ணெய்ப்புகாத, வெப்பத்துக்கு எதிர்ப்பு ஆகிய தன்மைகள் உள்ளதால் சமைக்கும் உணவு ஒட்டுவதில்லை. ஆனால், இந்தப் பாத்திரங்களில் இருப்பவை ‘நிலைத்திருக்கும் ரசாயனங்கள்’ என்பதால் உடலில் நீண்ட காலம் தேங்கி ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும்.

பெர் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருள்கள், நம் உடலில் ஹார்மோன்கள் உற்பத்தி செய்யும் தைராய்டு, பிட்யூட்டரி உள்ளிட்ட நாளமில்லா சுரப்பிகளின் சுரப்பை பாதித்து, நாளடைவில் உடல் பருமன், ரத்தக்கொதிப்பு, டைப் 2 நீரிழிவு என பல வாழ்வியல் நோய்கள் வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

பாத்திரங்கள்

உலக அளவில் இதுபோன்ற நீடித்த நச்சுப்பொருள்கள் மூலம் ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க 2001-ல் 110-க்கும் மேற்பட்ட நாடுகள் ஸ்டாக்ஹோம் (stockholm convention) என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. அந்த ஒப்பந்தத்தின் விரிவாக்கத்தில், ஒட்டாத சமையல் பாத்திரங்களின் பூச்சுகளில் பயன்படுத்தப்படுகிற நிலைத்திருக்கும் ரசாயனங்களால் ஏற்படக்கூடிய ஹார்மோன் சீர்கேடு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளிட்ட விவாதங்களும் தற்போது பேசப்பட்டு வருகின்றன” என்றவரிடம் இதற்கான மாற்றுவழிகளையும் தடுப்புமுறைகளையும் கேட்டோம்.

“இந்த ரசாயனங்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலையின் அருகில் உள்ள மக்கள் அதிகம் பாதிப்படைகிறார்கள் என்பதால், அவர்களின் தண்ணீர் பயன்பாடு கவனிக்க வேண்டிய ஒன்று. அதேபோன்று உணவு பேக்கிங் செய்யும் பொருள்கள், ஒட்டாத சமையல் பாத்திரங்கள், தண்ணீர் புகா பாத்திரங்கள், மைக்ரோவேவ் இவற்றின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு மண்பாண்டம், மரக்கலன்கள், இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதன் மூலம் அபாயத்தைத் தடுக்கலாம்” என்கிறார்.

ஃபரூக் அப்துல்லா

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *