
தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 11 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையின் மண்டலங்கள் 5, 6 இரண்டையும் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர்.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் பதிலளிக்க இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டுமென அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டிருக்கிறார்.
நிலமோசடி வழக்கில் சிக்கியவர்!
நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி பேசுகையில், ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்க தரப்பில் அவுட் சோர்ஸிங்குக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசுத் தரப்பிலிருந்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நாளை மறுநாள் வரை அவகாசம் கேட்டார். நாங்கள் அதற்கு எதிராக வாதிட்டோம். உடனே எங்களின் சங்கத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பி.எஸ்.ராமன் பேசினார்.

சாதிய ஆதிக்க திமிரோடு ராம்கி நிறுவனத்தின் பிரதிநிதியாக பி.எஸ்.ராமன் பேசியிருக்கிறார். மக்கள் ப்ளாக்மெயில் செய்வதாக அரசு வாதிடுகிறது. எவ்வளவு கேவலமான வாதம் இது?
ராம்கி நிறுவனத்தின் நிறுவனர் ஆந்திராவில் நிலமோசடி செய்து வழக்கில் சிக்கியவர். எங்களின் கோரிக்கைகளை கேட்பது ப்ளாக் மெயிலா?
தொழிலாளிகளை உடைக்க முயல்கிறார்கள். திமுக கவுன்சிலர்களும் சேகர் பாபுவும் நேரடியாக போன் செய்து பணம் தருகிறோம் என தொழிலாளர்கள் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.’ என்றார் காட்டமாக.