• August 11, 2025
  • NewsEditor
  • 0

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டும், இந்திய அணியில் தனக்கான இடத்தைப் பிடிக்க நீண்ட காலமாகப் போராடிவரும் இளம் வீரர் சர்பராஸ் கான்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதன் பிறகு, கடந்த ஆண்டு இறுதியில் நியூஸிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் கிடைத்த வாய்ப்பில் சதமடித்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்ட சர்பராஸ் கான், அந்த முழு தொடரிலும் பென்ச்சிலேயே அமரவைக்கப்பட்டார்.

சர்பராஸ் கான், ரிஷப் பண்ட்

அடுத்து, தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் 15 பேர் கொண்ட அணியில்கூட தேர்வுசெய்யப்படவில்லை.

இதற்கு மத்தியில், இரண்டே மாதங்களில் 17 கிலோ உடல் எடையைக் குறைத்து, ஃபிட்னஸ் தொடர்பாக தன்மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், தோற்றால் எதிர்காலம் மோசமாக இருக்கும் என்று கவாஸ்கரும், டெண்டுல்கரும் நினைத்திருந்தால் அவர்கள் ஜாம்பவான்களாக ஆகியிருக்க முடியாது என்று சர்பராஸ் கான் கூறியிருக்கிறார்.

மும்பையில் நேற்று (ஆகஸ்ட் 10) தொடங்கிய மழைக்கால கிரிக்கெட் தொடரான கங்கா கிரிக்கெட் லீக்கில் கலந்துகொண்ட பின் பேசிய சர்பராஸ் கான், “சுனில் கவாஸ்கர் சார் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த அன்றே, கங்கா லீக் போட்டிக்கு எப்படி வந்தார் என்பது பற்றி என் தந்தை நான் சிறுவயதாக இருக்கும்போது கூறியிருக்கிறார்.

எனவே, நானும் என் தம்பி முஷீரும் இதில் விளையாடுவதில் பெருமைப்படுகிறோம். மும்பை வீரர்கள் அனைவரும் கங்கா லீக்கில் விளையாட வேண்டும்.

கங்கா லீக்கில் சர்பராஸ் கான்
கங்கா லீக்கில் சர்பராஸ் கான்

சில வீரர்கள், தாங்கள் தோல்வியடைந்தால் தங்களின் எதிர்காலம் மோசமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

கவாஸ்கரும், சச்சின் டெண்டுல்கரும் இப்படி நினைத்திருந்தால் அவர்கள் ஜாம்பவான்களாக மாறியிருக்க மாட்டார்கள்.

பெரிய வீரர்கள் இதில் விளையாடினால், அது நகரத்தின் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். நீங்கள் இங்கே வெற்றி பெற்றால், உலகில் எங்கும் ரன்கள் எடுக்க முடியும்” என்று கூறினார்.

இஸ்லாம் ஜிம்கானாவுக்கு எதிரான போட்டியில் பார்கோபோன் கிரிக்கெட்டர்ஸ் அணிக்காக களமிறங்கிய சர்பராஸ் கான் 42 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *