• August 11, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்திலிருந்து அடியனூத்து வரை 19.5 கி.மீ தூரம் மதுரையை இணைக்கும் வகையில் மாநில சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த மாநில சாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கையகப்படுத்தும் நிலங்களுக்கு 2018 தமிழக அரசு நில எடுப்பு சட்டத்தின் படி இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் மற்றும் கிணற்றிற்கு ரூ. 30 ஆயிரம், தமிழக அரசு இழப்பீடாக வழங்குகிறது.

கிணற்றை காணவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

அதனால் 2013ஆம் ஆண்டு மத்திய அரசின் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால் தற்போது வரை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படாமல் தொடர்ந்து மாநில சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திடீரென 5 ஏக்கர் நிலத்திற்கு நீர் அளித்து வந்த ராஜ்குமார் என்ற விவசாயியின் 112 அடி கிணற்றை மாநில சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மூடியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ‘கிணற்றைக் காணவில்லை’ எனக் கூறி மாவட்ட நிர்வாகத்திற்கும், திமுக அரசுக்கும் எதிராக பதாகைகளை ஏந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *