
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மகர் துவாரிலிருந்து நிர்வாச்சன் சதனில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குப் பேரணியாக சென்றனர். இப்பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து செல்லும்போது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து இண்டியா கூட்டணி எம்பிக்கள் டெல்லி போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.