
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சிந்தனை பேரவை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு குறிப்பிட்ட தலைப்பில் உரையாற்றுவார்கள்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான திருவிழாவில் இந்தியத் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா கலந்துகொண்டார். அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் கீழடியில் 2014 – 15, 2015- 2016 என இரு கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏ.எஸ்.ஐ) சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், தற்போது இந்த அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அதில் திருத்தம் மேற்கொள்ளுமாறு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணாவிடமே திருப்பி அனுப்பப்பட்டது. இது பெரும் சர்ச்சையையும் பேசுபொருளாகவும் மாற்றியுள்ளது.
புத்தகத் திருவிழாவில் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுகையில்…
ஆதாரங்களை சங்க இலக்கியத்தோடு ஒப்பிட வேண்டும்
நம் தமிழ்நாட்டில் கீழடிக்கு முன்பே பல அகழாய்வுகள் நடைபெற்றுள்ளது. ஆனால் அதைப்பற்றி பலருக்கும் தெரிவதில்லை. நம் தமிழிலுள்ள பல சங்க இலக்கியங்கள் நம் வரலாற்றை எடுத்துரைக்கிறது. நமது தமிழ்நாட்டில் இதுவரை கிடைக்கப்பெற்ற தொல்லியல் ஆதாரங்களை சங்க இலக்கியங்களோடு ஒப்பிட வேண்டும். அவ்வாறு நாம் ஒப்பிடாமல் இருந்ததுதான் இப்போது நமக்கு பல சங்கடத்தை அளிக்கிறது.
ஈரோட்டில் நடந்த கொடுமணல் அகழாய்வு :
ஈரோட்டில் உள்ள கொடுமணல் நம் வரலாற்றை எடுத்துரைக்கும் ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளாக கொடுமணலில் நடந்த அகழாய்வில் பல அரிய வரலாற்று தகவல்கள் உலகிற்குத் தெரியவந்துள்ளது. உலகிற்கு “பெரில்” எனக் கூறப்படும் பச்சை மரகதக் கற்களை ரோமானியத்திற்கு “முசிறி” எனும் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியது திராவிடப் பழங்குடிகள்
உலகில் இதுவரை நாம் அறிந்துள்ள நாகரிகங்களில் சிந்து சமவெளி நாகரிகம் உலகின் மிக முக்கியமான நாகரீகம் என வரலாற்றில் பட்டியலிடப்பட்ட நாகரிகம் ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் 13 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நாகரிகம் ஆகும். 60,000 ஆண்டுகளாக நம் இந்திய நிலப்பரப்பில் வாழும் ஆதி மூதாதையர் தென்னிந்தியர்களின் (Ancient Ancestral South Indian – AASI) மரபணு கிடைத்த இடம் நம் தமிழ்நாடுதான்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செய்த ஆய்வானது லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மரபணு ஆராய்ச்சிகளின் மூலம் சிந்து சமவெளி நாகரிகம் திரவிடப் பழங்குடிகள் இணைந்து உருவாக்கப்பட்டது என்ற கருத்து உறுதிப்படுகிறது.
தொல்லியல் ஆய்வுக் குறிப்புகள் வெளியிடுவதில்லை:
தமிழ்நாட்டில் இதுவரை 150 க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பலருக்கும் தெரிவதில்லை. காரணம் அங்கு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுக் குறிப்புகள் வெளியிடப் படுவதில்லை. இதனால்தான் நமது வரலாற்று உண்மைகள் புதைக்கப்பட்டு நமது மாணவர்களின் பாடப்புத்தகங்களில் கொண்டுவரப்பட முடிவதில்லை. இத்தைகைய நிகழ்வினால் தான் நாம் வரலாற்றில் பின் தங்கியுள்ள நிலை ஏற்படுகிறது.

தென்னிந்தியாவில் ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை
வட இந்தியாவில் செய்தது போல தென்னிந்தியாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் நமது வரலாற்றை உறுதிசெய்ய முடியவில்லை. தென்னிந்தியாவில் மட்டும் ஆய்வுகளை முன்னெடுத்து செய்திருந்தால் எப்போதோ நாம் நம் மொழியின் வரலாற்றை உலகிற்கு உணர்த்திட முடியும். அதற்கான தொடக்கம்தான் கீழடி ஆராய்ச்சி மூலம் நடந்துகொண்டிருக்கிறது.
இது வெறும் சர்ச்சை அல்ல
நமது தமிழ்நாட்டில் பல முதுமக்கள் தாளி, கல் பதுக்கை, குத்துக்கல் எனப் புதைப்பிடங்கள் கிடைத்து வருகிறது. இந்தப் புதைப்பிடங்களை உருவாக்கிய மனிதன் இங்கு நிலையான ஒரு பூர்வீகத்தில் வாழ்ந்தவனாகத்தான் இருக்க முடியும். அப்போது வாழ்விடப் பகுதிகளும் கட்டாயம் இருக்கும். அதை தேடுவதற்கான ஆராய்ச்சியில் எங்களுக்குக் கிடைத்ததுதான் கீழடி. அப்படி நமக்கு கிடைத்த கீழடி நம் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துச் சொல்கிறது.
அந்த வாழ்வியல் கி.மு. 800 தோன்றியிருக்க வேண்டும் என்றும் கி.பி. 300 வரை இருந்திருக்க கூடும் என்றும் ஆய்வறிக்கைகள் முறையாக அறிவியல் ரீதியாக கணக்கிடப்பட்டுள்ளன. அந்த ஆய்வை நீங்கள் விமர்சனம் செய்யலாம். ஆனால் திருத்தம் செய்ய முடியாது.
கீழடியில் செய்தது வெறும் 2 சதவீத ஆய்வுதான்
கீழடி என்பது 110 ஏக்கர் கொண்ட ஒரு இடம். அதில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சி என்பது வெறும் 2 சதவீதம் மட்டும் தான். அதுவே இன்று உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது இன்னும் ஆய்வுகளை முறையாக மேற்கொண்டால் நம் இனத்தின் பெருமை உலகத்தால் அங்கீகரிக்கப்படும்.
வரலாறு என்பது நிலையான ஒன்று அல்ல. அது புதிய தரவுகளின் மூலம் மாறக்கூடியது. நடந்த அகழ்வாராய்ச்சிகளும் அந்த ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த வரலாற்று ஆதாரங்கள் மூலமும் நாங்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சியின் அறிக்கை என்பது தமிழன் என்ற இனத்தின் தொன்மையைத் தேடிக் கொண்டிருப்பதை பெருமையான ஒன்றாகத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய அதை சர்ச்சைக் கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியானதல்ல” எனக் கூறினார்.