• August 10, 2025
  • NewsEditor
  • 0

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்

மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக ஊடகங்கள், முகநூல் பக்கங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டில் இப்போது உறவுகள் பேசிக்கொள்வதை விட போனில் தான் அதிகமான நேரம் மூழ்கி இருக்கின்றனர்.

இந்த சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி இருப்பவர்கள் அதில் வரக்கூடிய நண்பர்களை நம்பி பல லட்சங்களை இழந்த எத்தனையோ சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் வரக்கூடிய விளம்பரங்களை பார்த்து ஏமாந்தவர்களும் உண்டு.

மும்பையை சேர்ந்த ஒரு இளம்பெண் பிரிந்து சென்ற தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைப்பதாக சொன்ன இரண்டு பேரை நம்பி அவர்களிடம் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா

பிரேக் அப் ஆன காதல்

தென்மும்பையில் உள்ள பைதோனியில் வசிக்கும் 52 வயது பெண் தனது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் 129 கிராம் தங்க ஆபரணங்கள், ரூ.3.2 லட்சம் ரொக்கம் போன்றவற்றை திருடிச்சென்றுவிட்டதாக போலீஸில் புகார் செய்திருந்தார்.

போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றப்பிரிவு போலீஸாரும் தனியாக விசாரித்து வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. 52 வயது பெண்ணின் மகளிடம் விசாரித்தபோது சமீபத்தில் அவர் தனது காதலனிடமிருந்து சமீபத்தில் பிரேக் அப் ஆகியுள்ளார். இதனால் அவர் மீண்டும் தனது காதலனுடன் சேர முயற்சி எடுத்து வந்தார்.

இன்ஸ்டாகிராமில் பிரிந்த காதலர்களை 24 மணி நேரத்தில் ஒன்று சேர்த்து வைப்போம் என்று இர்பான் கான்ஜி என்பவர் விளம்பரம் கொடுத்திருந்தார். அந்த பிளாக் மேஜிக் விளம்பரத்தை பார்த்து அதில் தனது போன் நம்பரை அந்த இளம்பெண் பகிர்ந்துள்ளார்.

அதனை பார்த்து அப்பெண்ணை ஒருவர் தொடர்பு கொண்டு தான் மதகுரு என்று பேசியிருக்கிறார். தேவையான பொருள்களை கொடுத்தால் சடங்குகள் மூலம் அப்பெண்ணின் காதலுக்கு இருக்கும் தடைகளை போக்க முடியும் என்றும், இதன் மூலம் காதலன் உங்களிடம் வந்து சேருவார் என்று ஆசை வார்த்தைகளை கூறினார்.

இதற்காக வெள்ளி பானைகள், தங்க விளக்குகள், தங்க ஈக்கள், தொட்டிகளில் வளர்க்கப்பட்ட செடிகள், மற்றும் தங்க ஆணிகள் வாங்க வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் நபர் தெரிவித்தார்.

பொருள்கள் வாங்க தேவையான பணத்தை அப்பெண் அனுப்பி வைத்தார். மேலும் தங்கமும் கொடுப்பதாக அப்பெண் தெரிவித்தார். அந்த தங்கத்தை வாங்குவதற்காக இரண்டு பேர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் வந்து அப்பெண் இரவில் வீட்டை திறந்து வைத்திருந்தபோது உள்ளே நுழைந்து 129 கிராம் தங்கம் மற்றும் ரூ.3.18 லட்சம் லட்சத்தை திருடிச்சென்றுள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சமாகும்.

மோசடி எப்படி நடந்தது?

52 வயது பெண்ணின் மகள் மொபைல் போனை ஆய்வு செய்தபோது இரண்டு மொபைல் நம்பர்கள் சந்தேகத்தை அளிப்பதாக இருந்தது. அந்த நம்பர்கள் குறித்து அப்பெண்ணிடம் விசாரித்தபோது முழு உண்மையையும் தெரிவித்தார்.

இதையடுத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்றவர்களின் போன் நம்பர்களை கண்காணித்ததில் அவர்கள் இருவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. ராஜஸ்தானில் உள்ள கங்காநகரில் அவர்கள் வசித்தது கண்டுபிடிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

திருட்டு

அவர்களது பெயர் விகாஸ் மற்றும் மனோஜ் என்று தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்கள் திருடிய தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை போலீஸார் முழுமையாக பறிமுதல் செய்தனர்.

இக்கும்பல் ஹரியானா மற்றும் டெல்லியை சேர்ந்த பெண்களிடமும் இது போன்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கங்காபூரில் இருக்கும் கேங்க் அதிக அளவில் பாலோவர்கள் இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை விற்பனை செய்வதும், அதனை பயன்படுத்தி இம்மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *