
சென்னை: அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழு'' நேற்று தொடங்கப்பட்டது. இக்குழுவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் இலக்குடன் தொடங்கப்பட்ட `நான் முதல்வன்' திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.