
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது புளியங்குடி. இந்தப் பகுதியில் யானை, காட்டுப் பன்றி எனக் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதும், அதனை மக்கள் மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடிப்பதும் போன்ற வனவிலங்கு மனித மோதல்கள் நிகழ்ந்து வந்தன.
தற்போது கரடியும் ஊருக்குள் வந்து மனிதர்களைத் தாக்கத் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று மலையடிவாரப் பகுதியில் விவசாயப் பணிக்குச் சென்ற மூன்று பெண்களை கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மலைப்பகுதியிலிருந்து கரடி ஊருக்குள் வந்ததால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயப் பணிக்குச் செல்ல அச்சப்படுகின்றனர். இதனால் மாவட்ட வனத்துறை அலுவலர் அகில் நல்லதம்பி உத்தரவின் பெயரில் வனத்துறையினர் கரடியைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரடி நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். தொடர்ந்து கரடியைப் பிடிப்பதற்குக் கூண்டுகள் அமைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் உள்ளனர். கரடியை நடமாட்டத்தைக் கண்டறியக்கூடிய வகையிலும் கண்காணிப்பு கேமராக்களையும் தற்போது வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.