
ஜம்மு – காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. முதல்வராகப் பதவியேற்ற ஒமர் அப்துல்லா ஜம்மு – காஷ்மீரை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து வருகிறார். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதிகாரம் முழுவதும் லெப்டினனட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம்தான் இருக்கிறது.
இந்த நிலையில், லெப்டினனட் கவர்னர் மனோஜ் சின்ஹா, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-ன் பிரிவு 98-ன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் தவறான கதைகளையும், பிரிவினைவாதத்தையும் பரப்புகின்ற 25 புத்தகங்களை உள்துறை அடையாளம் கண்டுள்ளது. அந்த புத்தகங்களுக்கு ஜம்மு – காஷ்மீரில் தடைவிதிக்கப்படுகிறது” என அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை தடைசெய்யப்பட்ட புத்தகங்களைத் தேடி வடக்கு முதல் தெற்கு வரை ஜம்மு – காஷ்மீரின் அனைத்து புத்தகக் கடைகளிலும் காவல்துறைக் குழுக்கள் சோதனை செய்து, பல தொகுதிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தடைசெய்யப்பட்ட புத்தகங்களில், பிரபல அரசியலமைப்பு நிபுணர் ஏ.ஜி. நூரானியின் ‘தி காஷ்மீர் டிஸ்பயூட் 914-2012’, சுமந்த்ரா போஸின் ‘காஷ்மீர் அட் க்ராஸ்ரோட்ஸ்’ மற்றும் ‘கான்டஸ்டு லேண்ட்ஸ்’, டேவிட் தேவதாஸின் ‘இன் சர்ச் ஆஃப் ஃபியூச்சர் – தி காஷ்மீர் ஸ்டோரி’, அருந்ததி ராயின் ‘ஆசாதி’, பத்திரிகையாளர் அனுராதா பாசின் எழுதிய ‘எ டிஸ்மண்டில்டு ஸ்டேட் – தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீர் ஆஃப் ஆர்ட்டிக்கிள் 370’ ஆகியவை அடங்கும்.
BREAKING⚠️
Govt Bans 25 Books in J&K for Spreading False Narrative and Promoting Secessionism.#Kashmir #JammuAndKashmir pic.twitter.com/kHjMrd5Oha
— Suney B (@sandeep_B4) August 6, 2025
இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முப்தி, “சுதந்திரக் கருத்துப் பரிமாற்றத்தில் ஜனநாயகம் செழித்து வளர்கிறது. புத்தகங்களைத் தடை செய்வதன் மூலம் வரலாற்றை அழிக்க முடியாது. அது பிரிவினையை மட்டுமே தூண்டுகிறது. காஷ்மீரில், ஜனநாயகக் குரல்களையும் அடிப்படை சுதந்திரங்களையும் அடக்குவது அந்நியப்படுதலையும் அவநம்பிக்கையையும் ஆழப்படுத்துகிறது. தணிக்கை கருத்துகளை மௌனமாக்காது, அது அவற்றின் அதிர்வுகளை அதிகரிக்கிறது,” என்று அவர் கூறினார்.