
சென்னை: ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்று ரெப்பேஜ் சுற்றுகள் மற்றும் 3-வது சுற்றுபோட்டிகள் நடைபெற்றன. ஆடவர் ஓபன் 2-வது சுற்றில் (ரெப்பேஜ்) கடும் மோதல் இருந்தது. ஆக்ரோஷமான முன்பக்க தாக்குதலுடன் தொடக்கத்திலேயே மிரட்டிய கொரியாவின் கனோவா ஹீஜே, ஹீட்டில் 16.67 புள்ளிகளை குவித்ததுடன் 4.17 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மகளிர் ஓபன் 2-வது சுற்றில் (ரெப்பேஜ்) இந்தியாவின் ஷ்ரிஷ்டி செல்வம், கமலி மூர்த்தி சிறப்பாக செயல்பட்டு 3-வது சுற்றுக்கு முன்னேறினர். தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் ஷ்ரிஷ்டி செல்வம் 3.03 புள்ளிகளையும், கமலி மூர்த்தி 5.57 புள்ளிகளையும் மட்டுமே பெற்றனர். இது கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு போதுமானதாக இல்லை. இதன் மூலம் இந்த சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணியின் பயணம் முடிவுக்கு வந்தது.