• August 8, 2025
  • NewsEditor
  • 0

இன்றைக்கு இருக்கும் சராசரிக் குழந்தைகளின் படிப்பு பாதிப்படைவதற்கு, அவர்களின் கவனத்திறன் குறைவதற்கு, அவர்கள் அதீத மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்கு, இன்னும் பல உடல் பிரச்னைகளைச் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் ‘சத்தம்’ என்கிறார் ஆடியாலஜி நிபுணர் பாலகிருஷ்ணன்.

Noise Pollution

சுவாசிப்பதைப் போலவே ஒலியை வாழ்வின் எந்த நேரமும் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். இயற்கையாக நம்முடைய காதுகளால் குறிப்பிட்ட அளவிலான ஒலியைக் கேட்க முடியும். அந்த அளவைத் தாண்டிய ஒலி நமக்கு ‘மாசாக’ மாறுகிறது. ஒலிமாசின் வரலாற்று விதை இரண்டு இடங்களிலிருந்து தொடங்குகிறது. தொழிற்புரட்சி (Industrial Revolution) ஏற்பட்டு உலகம் முழுக்கப் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்ட 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதில் வேலை செய்த பலருக்கும் காது கேட்கும் திறனில் பிரச்னை ஏற்பட்டது. அதேபோல், நகர்மயமாக்கல் (Urbanisation). ஏற்படுத்திய ஒலிமாசு உலகம் முழுக்கப் பல பெரும் கேடுகளை ஏற்படுத்தியது.

1962-ல் ஆராய்ச்சியாளர்கள் ரொசென் (Rosen) மற்றும் ஒலின் (Olin) ஒலி மாசு குறித்த ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அதில் தென்கிழக்கு சூடானில் வாழும் ‘மபான்’ (Mabaan) எனும் பழங்குடிகளின் செவித்திறனை ஆராய்ந்தார்கள். இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலேயே, மிகத் துல்லியமான செவித்திறன் கொண்டவர்கள் மபான் இனம்தான்.

அவர்களின் செவித்திறனோடு அமெரிக்காவின் தொழிற்சாலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் செவித்திறனை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அதில் மிகப் பெரியளவில் வேற்றுமை இருந்ததைக் கண்டறிந்தனர். மபான் இனத்தில் 70 வயதானவர்கூட மிகத் துல்லியமான செவித்திறன் கொண்டிருந்தார். அமெரிக்காவில் 10 வயதான குழந்தையின் செவித்திறன்கூட ஒலிமாசினால் பாதிக்கப்பட்டிருந்தது. இப்படியாகத் தொடங்கிய ஒலிமாசு இன்றைய 21-ம் நூற்றாண்டில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இயர்போன்
இயர்போன்

ஒலிமாசு என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் அதீதச் சத்தம் ‘தொழிற்சாலை ஒலிமாசு’ (Industrial Noise) என்று சொல்லப்படுகிறது. வாகனச் சத்தங்களில் தொடங்கி, டிவியில் வைக்கப்படும் அளவுக்கு அதிகமான ஒலிவரை எல்லாமே ‘சமூக ஒலிமாசு’ (Community Noise) என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பல இயந்திரங்கள் ஓடுகின்றன. அந்த இயந்திரங்கள் எழுப்பும் ஒலி என்பது மிக முக்கிய காரணியாக இருக்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறி மாசு ஏற்படுத்தும் காற்று, நீர் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அது ஏற்படுத்தும் சத்தத்திற்கு கொடுப்பதில்லை. அது தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களை மட்டுமல்லாது, தொழிற்சாலைகளை ஒட்டி இருக்கும் குடியிருப்புப் பகுதிகளையும் பெரியளவில் பாதிக்கிறது. வாகனச் சத்தங்கள் என்பது இன்று தவிர்க்கவே முடியாத ஒலிமாசாக உருவாகியிருக்கிறது. இதுவல்லாமல், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் உங்கள் இயர்போனில் அதிகச் சத்தம் வைத்து நீங்கள் கேட்பது என்பது உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் ஒலிமாசு.

ஒலிமாசினால் செவித்திறன் பாதிக்கும் அல்லது செவித்திறன் பறிபோகும் என்பதுதான் பொதுவான கருத்து. அது உண்மையும் கூட. ஆனால், ஒலி மாசின் பாதிப்பு அது மட்டுமே கிடையாது. மன அழுத்தத்திற்கு முக்கிய காரணியாக ஒலிமாசு இருக்கிறது. உங்களுக்குப் பின்னால், ஒரு வண்டி நிறுத்தாமல் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டேயிருந்தால் என்ன நடக்கும்? அதன் சத்தம் காதைக் கிழிக்கும். அதற்கும் மேல் மிகப் பெரிய கோபம், எரிச்சல், வெறுப்புதான் ஏற்படும். தொடர்ச்சியாக ஹைபர் டென்ஷனுக்கான காரணியாகவும் ஒலிமாசு இருக்கிறது. அதீத மன அழுத்தம், ரத்த அழுத்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், தலைவலி, தூக்கமின்மை டிமென்ஷியா (Dementia) போன்றவற்றுக்கும் ஒலிமாசு காரணமாகலாம்.

காது பத்திரம்

மிக அதிக ஒலியைத் திடீரெனக் கேட்கும்போது அது நேரடியாக செவிப் பறையை (Ear Drum) பாதிக்கும். மிதமான சத்தத்தை நீண்ட நேரம் கேட்டுக் கொண்டேயிருந்தால் அது காதின் நடுப்பகுதியை (Middle Ear) பாதிக்கும். அதிகச் சத்தத்தில் இருக்கும் தாயின் கருவறையில் இருக்கும் சிசுவின் இதயத்துடிப்பு பெருமளவு பாதிக்கும்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி உறங்கும் நேரத்தில் ஒலிமாசு 30 டெசிபலைத் தாண்டக்கூடாது என்கிறது. அதே போல், ஒரு வகுப்பறையில் ஒலிமாசு 35 டெசிபலைத் தாண்டாமல் இருந்தால்தான் குழந்தைகளால் பாடங்களைச் சரிவரக் கவனிக்க முடியும். ஆனால், சாதாரணமாகவே நகரங்களில் ஒலிமாசு 50 டெசிபல்களைத் தாண்டித்தான் இருக்கிறது. இது குழந்தைகளின் கவனிப்புத் திறனைப் பெருமளவு பாதிக்கும். மேலும், குழந்தைகளுக்கு ஒலி மாசினால் டின்னிடஸ் (Tinnitus) ஏற்படும். அதாவது, அமைதியான நேரங்களில்கூட காதுகளில் ஏதோ ஒரு சத்தம், கேட்டுக் கொண்டேயிருக்கும். தீபாவளி நேரத்தில் பட்டாசு சத்தத்தால் குழந்தைகளுக்கு இது தற்காலிகமாக ஏற்படுவதுண்டு.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் ஒலிமாசைத் தடுக்க மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், நாம் இப்போதுதான் இதுகுறித்து விழிப்புணர்வை அடைந்திருக்கிறோம். தனி மனிதராக உங்கள் வீட்டில் அதிக ஒலி எழுப்பாத வண்ணம் வாழ்ந்து உங்களைத் தற்காத்துக்கொள்ளலாம். அதிகச் சத்தம் எழும் பகுதிகளுக்குச் செல்லும்போது காதில் ‘இயர் ப்ளக்’ (Ear Plugs) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் ஓரளவுக்கு உங்களைத் தற்காத்துக் கொள்ளலாம். மற்றபடி இதற்கான நிரந்தரத் தீர்வு என்பது மொத்தச் சமூக மாற்றம், இயற்கைசார்ந்த வாழ்வு போன்றவைதான். ஆனால், கண்ணுக்கெட்டிய தூரம்வரை அதற்கான சாத்தியங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை’’ என்கிறார் ஆடியாலஜி நிபுணர். பாலகிருஷ்ணன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *