
தனியார் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்காக தோனி கடந்த ஒரு வாரமாக சென்னையில் முகாமிட்டிருக்கிறார். இந்நிலையில், இன்று சென்னை பாலவாக்கத்தில் தோனி ‘7Paddle’ என சொந்தமாக ஒரு ஸ்போர்ட்ஸ் சென்டரை திறந்திருக்கிறார். இந்நிகழ்வுக்கு இசையமைப்பாளரான அனிருத்தும் சிஎஸ்கே வீரரான ருத்துராஜூம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர்.
பாலவாக்கத்தில் 20,000 சதுர அடி பரப்பளவில் தோனி இந்த ஸ்போர்ட்ஸ் செண்டரை கட்டியிருக்கிறார். இதில் 3 Padle Court (டென்னிஸ் + ஸ்குவாஷ் இணைந்ததை போன்ற ஆட்டம்) களும் ஒரு பிக்கிள் பால் கோர்ட்டும் நீச்சல் குளமும் அமைந்திருக்கும். இவை போக ஜிம், உடற்பயிற்சிக்கு பிறகு உடலை இலகுவாக்கிக் கொள்வதற்கான சிறப்பு அறை, கஃபே, நீராவிக் குளியல் போன்ற வசதிகளும் இந்த ஸ்போர்ட்ஸ் செண்டரில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த அனிருத்தும் ருத்துராஜூம் தோனியுடன் இணைந்து Paddle ஆட்டத்தை ஆடியிருந்தனர்.

இந்த ஸ்போர்ட்ஸ் செண்டர் பற்றி தோனி பேசுகையில், ‘சென்னை எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெசலான இடம்தான். கிரிக்கெட்டுக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி சென்னை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அப்படியிருக்க என்னுடைய முதல் ஸ்போர்ட்ஸ் செண்டரை சென்னையில் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். இந்த Paddle ஆட்டம் சுவாரஸ்யமானது. எல்லாராலும் ஆட முடியும். விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் குடும்பங்களும் பிட்னஸ் மீது ஆர்வமுள்ளவர்களும் இதை அவர்களுக்கான இடமாக உணர்ந்து பயன்பெற வேண்டும் என விரும்புகிறேன்.’ என்றார்.