
ராஜபாளையம்: “அதிமுகவுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு. திமுக கூட்டணிக்கு ஒரே கொள்கை என்றால், அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் இணைத்து விடலாமே” என்று ராஜபாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி பேசினார்.
அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தில் இன்று மாலை ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தார். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன் பேருந்தில் நின்றவாறு பேசிய பழனிசாமி பேசியது: ”ஸ்டாலின் தங்கள் கூட்டணி வலுவானது என கூறி வருகிறார். உங்களுக்கு கூட்டணி வலிமை, எங்களுக்கு மக்கள் வலிமை. ஸ்டாலின் கனவு பலிக்காது. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர்.