• August 7, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்காவின் அதிகபட்ச வரிவிதிப்பை எதிர்கொள்ளும் நாடாக மாறியிருக்கிறது இந்தியா. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி 25% வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதுடன், 6ம் தேதி கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக இந்த கூடுதல் வரி விதிக்கப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கும் நிலையில் ரஷ்யாவிடம் எரிபொருள் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளை விட்டுவிட்டு இந்தியாவை மட்டுமே குறிவைப்பது ஏன் எனக் கேட்கப்பட்டது.

சீனா போன்ற ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படாதது ஏன் என நிருபர் ஒருவர் கேட்டபோது, “வெறும் 8 மணிநேரம் தான் ஆகியிருக்கிறது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்துப்பாருங்கள். இன்னும் பல இரண்டாம் நிலை தடைகளைப் பார்க்கப்போகிறீர்கள்” எனப் பதிலளித்துள்ளார். 

Trump

சமீப ஆண்டுகளில் இந்தியாவுக்கு அண்டை எதிரியான சீனாவை எதிர்கொள்ள ஆதரவாக இருக்கும் நாடு அமெரிக்கா. ரஷ்யாவை உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறார். 

இந்தியா அதன் முக்கிய எதிரியாக கருதும் பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை வரலாம் என கேலி செய்தார் ட்ரம்ப். இந்தியா இவற்றுக்கு எதிர்வினையாற்றும் வகையில், அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் மற்றும் உரங்களை தொடர்ந்து வாங்கி வருவதன் மூலம், ரஷ்யாவுடனான வர்த்தக தடையில் இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடிப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது.

மேலும் இந்தியாவின் 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய சந்தை நிலவரத்தைப் பொருத்து சில முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தது. அமெரிக்காவிடம் இவற்றைத் தெளிவுபடுத்தியும் வரி விதித்திருப்பது, “நியாயமற்றது மற்றும் காரணமில்லாதது” என விமர்சித்தது இந்திய தரப்பு. 

ரஷ்யாவும் சீனாவுமே அமெரிக்காவின் எதிரிகள் எனப் பேசி வந்த ட்ரம்ப், திடீரென இந்தியாவின் மீது ஆக்ரோஷத்தை திருப்பியிருப்பது அமெரிக்க அரசியலிலும் இந்திய அரசியலிலும் பூகம்பமாக திரும்பியுள்ளது. 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *