
மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள்-2025 விழா மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை கஜோல் கலந்துகொண்டார். இந்திய சினிமாவுக்கு நடிகை கஜோல் செய்த பங்களிப்புக்காக மதிப்புமிக்க ராஜ் கபூர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றப் பிறகு நடிகை கஜோல் மராத்தி மொழியில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும், ஆங்கிலம் கலந்த மராத்தி மொழியில் பேசினார். செய்தியாளர் சந்திப்புக்கு இடையே செய்தியாளர் ஒருவர், இந்தியில் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது நடிகை கஜோலின் முகம் உடனடியாக மாறியது. மேலும், “நான் பேசியதை மீண்டும் இந்தியில் பேசவேண்டுமா? ஏன்? நான் பேசுவது யாருக்கெல்லாம் புரியுமோ அவர்கள் புரிந்துகொள்ளட்டும்.” என இந்தியில் பதிலளித்துவிட்டு, மீண்டும் ஆங்கிலம் கலந்த மராத்தி மொழியில் பேசினார். அவர் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் அவர் கோபப்பட்ட பகுதிமட்டும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்தி மொழிப் பேசும் மாநிலத்தவர்கள் நடிகை கஜோலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“அவர் நடிப்பதற்கு பாலிவுட் இந்தி படங்கள் வேண்டும். சம்பாதிக்க இந்தி மொழி வேண்டும். ஆனால் அவர் இந்தி மொழியில் பேசமாட்டாரா? அவர் இனி மராத்தி மொழி படங்களில் மட்டும் வேலை செய்யட்டும். அவர் இந்தியை மதிக்கவில்லை என்றால், ஏன் படத்தை இந்தியில் மொழிபெயர்க்க வேண்டும், ” எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், இதுகுறித்து சற்றும் கண்டுகொள்ளாத நடிகை கஜோல், அவர் விருது விழாவுக்கு தன் அம்மாவுடன் சென்ற வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “என் அம்மா ஒரு காலத்தில் நடந்த அதே மேடையில், என் பிறந்தநாளில் நானும் நடப்பது பிரபஞ்சம் எனக்கு நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை நினைவூட்டுவது போல உணர்கிறேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.