• August 7, 2025
  • NewsEditor
  • 0

பொருநைப் பூக்கள், பொதிகை மலை அற்புதங்கள், தாமிரபரணி கரை சித்தர்கள், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் என்று பல்வேறு ஆய்வு நூல்களை எழுதிய திருநெல்வேலியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த்துறை நடத்திய தமிழ் மன்றத்தில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தபோது, ‘தமிழர் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்’ என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றினார்.

ஆதிச்சநல்லூர்

அப்போது மேடையில் அவர் கூறியதாவது, “2004-ல் தி.சத்தியமூர்த்தி ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தபோது நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழி கிடைத்தது.

அக்காலத்தில் தாழிகளுக்குள் முழு மனிதனை அப்படியே வைத்தார்கள், அவ்வாறன்றி எலும்புக்கூடுகளை மட்டும் தாழிகளுக்குள் வைக்கும் வழக்கமும் இருந்தது. சிவகளையிலும் மூன்று கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டது. அங்குள்ள இரும்புப் பொருட்களை பீட்டா லேபில் (beta lab) பகுப்பாய்வு செய்யும்போது அப்பொருள்கள் எல்லாம் 5500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. மேலும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைய முக்கிய காரணம் நம் ஆட்சி தலைவரும், ஆதிச்சநல்லூர் மக்களும் தான்.

நிறைய பழமையான இடங்கள் காலப்போக்கில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாகச் சொன்னால் திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு கொட்டிக்கிடக்கிறது. திருநெல்வேலி அருங்காட்சியகத்திற்கு அருகே பாளையங்கோட்டையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஒரு நீர்த்தொட்டி உள்ளது.

பிரம்மாண்ட வடிவமைப்புடன் உள்ள அதன் கல்வெட்டில் காமராசர் அந்த நீர்த் தொட்டியைத் திறந்து வைத்ததற்கான செய்திகள் இடம்பெறுகிறது. இதனைப் போன்று சரோஜினி பூங்காவிலும் கவர்னர் பெயரால் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பாளையங்கோட்டை பேருந்து நிலையம் பற்றிய தகவல்கள் ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டிலும் மகாராஜா மற்றும் காமராசர் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது” என்றார்.

மேலும் முத்தாலங்குறிச்சி காமராசு மாணவர்களிடம், “நீங்களே இன்று கதை எழுதலாம், ஒரு குழு அமைத்து அதைப் பகிரலாம். எங்கள் காலத்திலெல்லாம் எதையும் பத்திரிக்கைகளில் எழுதினால் ஐம்பதுகளில் ஒன்று மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வெளியாகும். அதில் கிடைக்கின்ற ஐந்து ரூபாயில் அத்தனை மகிழ்ச்சி கொண்டோம். இன்றோ எல்லோரும் படிக்கின்றனர்.

அக்காலத்தில் நீர்நிலைகளுக்கெல்லாம் காவல் வைக்கப்பட்டிருந்தது. இன்றோ நம் வீட்டில் இருந்து வெளிவரும் சாக்கடை நீர் நதியோடு கலக்கிறது. இதனால் நீர்நிலைகள் மாசடைகிறது. பொதுவாக நான் மாணவர்களிடம் அதிகமாகப் பேசக் காரணம் இது போன்ற செய்திகளை நீங்களே கடத்திச் செல்கிறீர்கள்.” என்று கூறினார்.

இடையில் சபிகா என்கிற மாணவி ஆதிச்சநல்லூர் எலும்புக்கூடுகளில் இருக்கும் நெற்றிக்கண் பற்றிய கேள்வி கேட்க, “அன்றைய காலத்தில் முத்துக்குளித்தல், சங்குக் குளித்தல், கடல் வழிப்பயணம் போன்றவற்றைச் செய்தனர். ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை அவர்கள் கடலுக்குள்ளேயே இருப்பதால் காதடைப்பு ஏற்படும். இவ்வாறு கடலுக்குள் சென்று முத்துக் குளிப்பவர்களுக்கு ஒரு நோய் ஏற்படும். அதுவே ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற எலும்புக்கூடுகளின் நெற்றியில் உள்ள ஓட்டை உண்டாகக் காரணம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *