• August 6, 2025
  • NewsEditor
  • 0

‘பத்திரிகையாளர் சந்திப்பு!’

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஆறாவது நாளை எட்டியிருக்கிறது. இன்றுதான் அரசு சார்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் மேயரும் போராட்டக் குழுவினருடன் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தனர்.

தூய்மைப் பணியாளர்களுக்காக போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்க பத்திரிகையாளர் சந்திப்பு

உழைப்போர் உரிமை இயக்கத்தின் சட்ட ஆலோசகரான எஸ்.குமாரசாமி பேசுகையில், ‘1.08.2025 முதல் மண்டலங்கள் ஐந்தும் ஆறும் தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதாக மாநகராட்சி கூறியிருக்கிறது. மாநகராட்சி இதை யோசனையாக முன்வைக்கும் போதே நாங்கள் இந்தப் பிரச்னையை தொழில் தீர்ப்பாயத்துக்கு எடுத்து சென்றுவிட்டோம். அவுட் சோர்சிங் கூடாது என சங்கங்கள் சொல்வதில் நியாமயமிருக்கிறதா?

‘அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை..’

தொழிலாளர்களின் பணி நிரந்தர கோரிக்கையில் நியாயமிருக்கிறதா? போன்ற கேள்விகளை தொழில் தீர்ப்பாயம் அரசுக்கு கேட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தொழில் தீர்ப்பாயத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது. எங்களுடைய தொழிலாளர்கள் ஐந்து நாட்களாக போராடிய பிறகு அரசு சார்பில் இன்றைக்குதான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார்கள். அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா, துணை மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் எங்களுடன் பேசினார்கள்.

வழக்கறிஞர் குமாரசாமி
வழக்கறிஞர் குமாரசாமி

தனியார்மயத்துக்கு நீங்கள் ஒத்துக்கொள்ளலாமே? நீங்கள் வேலைநிறுத்தம் செய்வதால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என அவர்கள் தரப்பில் கூறினார்கள். நாங்கள் வேலைநிறுத்தம் செய்யவில்லை. NULM திட்டத்திலிருந்து நீங்கள்தான் எங்களை வேலையை விட்டு நீக்கியிருக்கிறீர்கள். பணி நிரந்தரத்துக்கு குறைந்த எதற்கும் நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என எங்கள் தரப்பில் கூறிவிட்டோம். ஒரு மணி நேரம் தாருங்கள், கலந்து பேசிவிட்டு வருகிறோம். அதன்பிறகு, எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறியிருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். தொழில் தீர்ப்பாயத்தின் அனுமதி இல்லாமல் தனியார்மயத்தை நோக்கி செல்வது சட்டப்படி குற்றம். இதன் மூலம் மாநகராட்சி கமிஷனருக்கு 6 மாதம் ஜெயிலும் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.’ என்றார்.

‘வழக்கறிஞர் குமாரசாமி பேட்டி!’

பத்திரிகையாளர் சந்திப்பை நிறைவு செய்தவுடன் எஸ்.குமாரசாமியை தனியாக சந்தித்தும் உரையாடினோம்.

ரிப்பன் மாளிகை என்பது மாநகராட்சியின் அதிகார வர்க்கம் அத்தனையும் குடிகொண்டிருக்கும் இடம். அங்கே தூய்மைப் பணியாளர்கள்/ஐந்து நாட்களாக இரவு பகலாக போராடுகிறார்கள். யாரும் சீண்டவில்லை. ஆறாவது நாள்தான் அதிகார வர்க்கம் கொஞ்சமேனும் செவிமடுக்கும் எனில் இங்கே என்னதான் நடக்கிறது?

சமூகநீதிக்கு நேர்ந்திருக்கும் அவல நிலையைப் பார்க்கையில் கவலையாக இருக்கிறது. அங்கே போராடிக் கொண்டிருப்பதில் பெரும்பாலானோர் அருந்ததியர்கள், அனைத்து சாதி ஏழைகள், பெண்கள். அதிலும் கணவனை இழந்த பெண்கள் இல்லை கணவனால் கைவிடப்பட்ட பெண்கள். கீழே இருப்பவர்களை கைத்தூக்கி மேலேற்றி விடுவதுதான் சமூகநீதி.

வழக்கறிஞர் குமாரசாமி
வழக்கறிஞர் குமாரசாமி

ஒரு நாளைக்கு 753 ரூபாய் கூலியாக கொடுக்கிறார்கள். பணி நிரந்தரம் கிடைத்தால் சமூகத்தில் தாங்களும் ஒரு நிலைக்கு வருவோம் என்பதுதான் அந்த மக்களின் விருப்பம். அவர்களை மேலேற விடாமல் இருக்கும் நிலையிலிருந்து கீழே பிடித்து இழுத்து விடுவதுதான் உங்களின் சமூக நீதியா? திமுக பாஜகவை எதிர்க்கிறது. மாநில சுயாட்சி பேசுகிறது. இவர்களும் பாஜகவை போல சமூகநீதிக்கு எதிரானவர்களாக இருக்கக்கூடாது.

போராடிக் கொண்டிருக்கும் மக்களிடமும் பேசினேன். ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க முடியாது. அப்படியே எடுத்தாலும் சம்பளத்தை பிடித்துக் கொள்வார்கள் என்கிறார்கள். 6 நாள் வேலை செய்தால் ஒரு நாள் விடுப்பு என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை இல்லையா?

எளிய மக்கள் எல்லாவற்றையும் போராடித்தான் பெற வேண்டும் எனும் நிலையே இருக்கிறது. மக்களுக்கு சாதகமான சட்டங்கள் இருந்தாலும் அதை நிறைவேற்றுவதில் அரசுகள் சுணக்கம் காட்டுகின்றன. 2017 இல் அரசாணை 62 இன் படி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர். ஆனால், நாங்கள் தெருவில் இறங்கி போராடி ரிப்பன் மாளிகை முன்பு போக்குவரத்து ஸ்தம்பித்த பிறகுதான் இந்தத் தொழிலாளர்களுக்கான நியாயமான ஊதியமே கிடைத்தது. ஆக, இந்த மக்களை எல்லாவற்றுக்கும் போராடும் நிலையில்தான் அரசு வைத்திருக்கிறது.

வழக்கறிஞர் குமாரசாமி
வழக்கறிஞர் குமாரசாமி

இருதரப்புக்கும் பாதிப்பு இல்லாமல் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என அமைச்சர்களுடனான சந்திப்பில் பேசப்பட்டதாக கூறினீர்கள். அப்படியெனில், நீங்களும் எதையோ சமரசம் செய்துதானே ஆக வேண்டும்?

பணி நிரந்தரம் என்கிற உரிமையை எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வெள்ளிக்கிழமையில் இருந்து 500 பேரை மட்டும் பணிக்கு அனுப்பும் முடிவை எடுத்திருக்கிறோம். அதுவும் மக்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காக. ஆகஸ்ட் 2024 இல் இந்த தனியார்மய தீர்மானத்தை நிறைவேற்றிய போதே எதிர்ப்பு தெரிவித்தோம். பேச்சுவார்த்தையில் 31.03.2025 வரைக்கும் அதன்பிறகு, 31.07.2025 வரைக்கும் என இரண்டு முறை தனியார்மயமாக்கலுக்கு எதிரான இடைக்கால பாதுகாப்பைப் பெற்றோம். இப்போதும் அதையே தொடரலாமே. நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதைப் பொறுத்து முடிவெடுத்துக் கொள்ளலாமே.

சரி, நீங்கள் சொல்வதைப் போல தனியாருக்கு கொடுக்கவில்லை என வைத்துக் கொள்வோம். இதே நிலை தொடர்ந்தாலும், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் நிறைய தேங்கிதானே நிற்கிறது. அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?

முதலில் இருக்கிற வேலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். மக்கள் விழிப்படைய ஆரம்பித்திருக்கிறார்கள். மாநகராட்சி எவ்வளவு அலட்சியமாக ஊழியர்களை நடத்த முடியுமோ அவ்வளவு அலட்சியமாக நடத்துகிறது. பெண்களுக்கு ஒதுங்க கழிவறை கிடையாது. மகப்பேறு விடுமுறை கிடையாது. இன்னும் கேவலமான ஒரு விஷயத்தை சொல்லவா? சாலைகளை பெருக்கும் துடைப்பத்தை கூட ஊழியர்கள் கைக்காசை போட்டு வாங்கி செல்கிறார்கள். சுகாதாரத்துக்கு ஒரு க்ளவுஸ் கூட கொடுப்பதில்லை. மாநகராட்சியின் ஊழலையும் அவலத்தையும் பேசினால் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் விழித்திருக்கிறார்கள். இனி அவர்களின் உரிமைக்காக கட்டாயம் போராடுவார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *