• August 6, 2025
  • NewsEditor
  • 0

தமிழகத்தில் `உங்களுடன் ஸ்டாலின்’ என்னும் மருத்துவ முகாம் திட்டத்திற்கான விளம்பரங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

“அரசின் திட்டங்களில் முதல்வர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என்பது உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கி இருக்கக்கூடிய உத்தரவு. ஆனால் அதை மீறும் வகையில் `உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் விளம்பரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே இதை தடை செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டிருந்தார்.  

சிவி சண்முகம்

தடை போட்ட உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், `அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ முன்னாள் முதல்வர்களின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது. இது உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்புக்கு எதிரானது. அதேபோல அரசு திட்டத்தின் பெயர்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மேலும் ஆளும் கட்சியின் பெயர் அவற்றின் சின்னம் ஆகியவற்றையும் பயன்படுத்துவதும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு தொடங்கியுள்ள  உங்களுடன்  ஸ்டாலின்  திட்டத்தில் இவை அனைத்துமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எனவே அரசியல் தலைவர்களின் பெயரையோ முன்னாள் முதல்வர்கள் மற்றும் தற்போதைய முதல்வரின் புகைப்படத்தையோ பெயரையோ பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கிறோம்” என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

 காரசார விவாதம்…!

இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், திமுக-வும் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “ஏற்கனவே உள்ள அரசின் திட்டங்களை மக்களிடம் ஒன்றாக சேர்த்து அவர்கள் பயன் பெறும் வகையில் முகாம்கள் அமைத்து செயல்படுத்தும் வகையில் தான் இந்த `உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிய திட்டம் கிடையாது. ஏற்கனவே இருக்கும் அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஊக்குவிப்பதற்காகத்தான் விழிப்புணர்வு அம்சமாக கொண்டுவரப்பட்டிருக்கிறது” என வாதங்களை முன் வைத்தார்.

உங்களுடன் ஸ்டாலின்

பொய் சொல்கிறார்கள்

அப்போது பேசிய தலைமை நீதிபதி, “முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நீங்கள் கொண்டு வந்த எத்தனை திட்டங்களுக்கு ஒரே ஒரு நபரின் பெயரை வைத்திருக்கிறீர்கள்?” என ஜெயலலிதா அவர்களின் பெயரை குறிப்பிடாமல் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சி.வி சண்முகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங், `ஒரு திட்டம் கூட அப்படி கிடையாது’ என பதில் அளித்தார்.

ஆனால் அதை மறுத்த திமுக தரப்பு வழக்கறிஞர்கள், “பொய் சொல்கிறார்கள். 20க்கும் மேற்பட்ட திட்டங்களை இவர்கள் இவர்களது கட்சித் தலைவரின் பெயரில் வைத்திருப்பதை எங்களால் பட்டியலிட முடியும்” என சொல்லி அதற்கான ஆவணங்களை தலைமை நீதிபதியிடம் கொடுத்தனர்.

அம்மா என்றால் அது ஜெயலலிதா தான்

தொடர்ந்து வாதங்களை முன்வைத்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், “இவர்கள் பல திட்டங்களுக்கு அம்மா என்ற பெயரில் பெயர் வைத்திருக்கிறார்கள். அம்மா என்றால் அது ஜெயலலிதா தான் என்பது தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும்” என தெரிவித்தார். மேலும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி என அதிமுக கட்சித் தலைவர்களை அக்கட்சியின் தொண்டர்கள் அழைக்கும் பெயரில்தான் அரசின் திட்டங்களுக்கு வைத்திருக்கிறார்கள். மத்திய அரசின் சில திட்டங்களுக்கு கூட இவர்கள் சில சமயம் இப்படி பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள்” என வாதங்களை முன்வைத்தார்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தலைமை நீதிபதிகள் படங்கள் கூட..!

அதைத்தொடர்ந்து திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “அரசின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் மக்களிடம் அரசின் திட்டங்கள் செல்லக்கூடாது என்பதற்காக அரசியல் உள் நோக்கத்துடன் அதிமுக இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறது” என கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

மேலும், “அரசின் விளம்பரங்களில் முதல்வரின் புகைப்படம் பெயர் இடம்பெறக்கூடாது என உச்ச நீதிமன்றம் முன்னதாக தெரிவிக்கவில்லை. ஒரு திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக பிரதமர் முதல்வர் ஆகியோரது பெயர் மற்றும் படங்கள் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் சில சமயம் கவர்னரின் படங்கள் கூட இவ்வாறு இடம் பெற்றிருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் படங்கள் கூட பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என வாதங்களை முன்வைத்தார்.

தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அம்மாவாக இருக்கலாம்!

அப்போது சிரித்தபடியே பேசிய தலைமை நீதிபதி, `எங்களது புகைப்படங்களை எதற்கு வைக்க வேண்டும்’ என கேட்டார். அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, `பதவி ஏற்பு விழா அரசு நிகழ்ச்சிகள் அல்லது முக்கிய திட்டங்கள் ஏதேனும் நீதித்துறை சார்ந்த அறிவிக்கப்படுகிறது என்றால் தலைமை நீதிபதிகளின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படும்’ என பதிலளித்தார்.

மேலும், “இந்த மனுவை தாக்கல் செய்திருக்கக் கூடிய நபர் தற்போது அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். ஆனால் முந்தைய ஆட்சி காலத்தில் 22 அரசு திட்டங்களுக்கு ஒரே நபரின் பெயரை அறிவித்த போது இவர் மாநில அமைச்சராக இருந்திருக்கிறார். எனவே இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் வழக்கு” என வாதங்களை முன் வைத்தார்.

சி.வி. சண்முகம்

ஆனால் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த அதிமுக தரப்பு வழக்கறிஞர், “அம்மா என்பது யாருடைய தனிப்பட்ட பெயரும் கிடையாது. அது ஒரு பொதுவான பெயர்” என கூறினார். அப்போது சிரித்துக் கொண்டே பேசிய தலைமை நீதிபதி, “ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அம்மாவாக இருக்கலாம்” என கூறினார்.

`முதல்வரின் முகவரி’ – அதை எதிர்க்கவில்லையே

தொடர்ந்து அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `கட்சியின் கொள்கை தலைவர்கள், அவர்களது புகைப்படங்கள் ஆகியவை அரசின் திட்டங்களில் எந்த வகையிலும் இடம் பெறக் கூடாது என்பது உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பாக தெரிவித்திருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் இங்கு மீறப்பட்டிருக்கிறது. தற்போது முதல்வராக இருக்கக் கூடியவரின் பெயர் புகைப்படம் இடம் பெற்றிருப்பது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்பட்டமாக மீறுவதாகும்” என கூறினார்.

அதேபோல `உங்களுடன் ஸ்டாலின்’ என்பதை ஒரு திட்டம் என்று தான் இவர்கள் முதலில் அறிவித்தார்கள். தற்பொழுது அதை இல்லை என்று கூறுகிறார்கள் . இது நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்படும் பொய்யாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் எந்த ஒரு நலத்திட்டத்தையும் நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என நினைக்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ள நடைமுறைகளை மட்டும்தான் சுட்டிக் காட்டுகிறோம்” என வாதங்களை முன்வைத்தார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அதேபோல, `ஏற்கனவே முதல்வரின் முகவரி உள்ளிட்ட பல திட்டங்கள் இருக்கிறது. அவை எதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. காரணம் அவை அனைத்தும் பொதுவான பெயரில் பயன்படுத்தப்படுகின்றது. அதனால் எங்களுக்கு பிரச்சனை இல்லை” என வாதங்களை முன்வைத்தார்.

நாகரீகம் கருதி..!

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மனுவை உச்ச நீதிமன்ற வழக்காக நாங்கள் மாற்றிக் கொள்கிறோம்” எனக் கூறி உத்தரவுகளை வாசிக்கத் தொடங்கினர்.

“பொதுமக்களின் வரிப்பணத்தில் குறிப்பிட்ட கட்சித் தலைவரின் பெயர் வைக்கப்படுவது எதிர்க்கப்பட வேண்டும் என கூறும் மனுதாரர் சி.வி சண்முகம் மற்ற திட்டங்களுக்கு இப்படி ஒரு குறிப்பிட்ட தலைவரின் பெயரை அரசின் வைத்ததற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த ஒரு குறிப்பிட்ட திட்டத்தை மட்டும் அவர் எதிர்ப்பது ஏன் என்பதுதான் இங்கு கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சிவி சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்!

இதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட தலைவரின் பெயர் வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியலை எங்களிடம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் நாகரீகம் கருதி அந்த பெயர்களை நாங்கள் படிக்கவில்லை” என உத்தரவில் பதிவு செய்தார்.

மேலும், “அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது. ஆனால் சமீப நாட்களாக தொடர்ச்சியாக நீதிமன்றங்களை அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த வழக்கை தொடர்ந்த அதிமுகவின் சிவி சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறோம்.” எனக் கூறி, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு தடைவிதித்து உத்தரவிடுகிறோம் எனவும் தீர்ப்பு வழங்கினர்.

சி.வி சண்முகம் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாய் அபராதத்தை ஒரு வார காலத்திற்குள் அவர் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதை மக்கள் நலத்திட்டங்களுக்காக மட்டும்தான் தமிழ்நாடு அரசு பயன்படுத்த வேண்டும் என தெளிவு படுத்திய நீதிபதிகள், வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதே விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவி. சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறார் என கூறிய போது `அப்படி என்றால் பத்து லட்ச ரூபாய் அபராதத்தை 20 லட்ச ரூபாயாக அதிகரிக்கட்டுமா?’ என சிரித்தபடியே கேட்டார். அதற்கு சிவி சண்முகம் தரப்பு வழக்கறிஞர் `வேண்டாம்’ என்பது போல கூற  தொகையை 10 லட்சமாக நிர்ணயத்தை உத்தரவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *