
நாகர்கோவிலில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்பது கடந்த தேர்தலில் திமுக அளித்தவாக்குறுதி. இத்தனை நாள் விட்டுவிட்டு இப்போது அதை நிறைவேற்ற கிளம்பி இருக்கிறது ஆளும் கட்சி. அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை… ஆனால், அதற்காக தேர்வு செய்திருக்கும் இடத்தை வைத்துத்தான் இப்போது சர்ச்சை.
நாகர்கோவிலின் மையப்பகுதியில் உள்ளது அனாதைமடம் மைதானம். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் ‘அவிட்டம் திருநாள் மைதானம்’ என்றிருந்த இது அனாதைகள் தங்குவதற்காகவும், இளைப்பாறுவதற்காகவும் மன்னர்களால் வழங்கப்பட்டது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவிலான இந்த மைதானம் தற்போது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுக்கூட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு விடுவதன் மூலம் இந்த மைதானத்தால் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.80 ஆயிரம் வரைக்கும் வருமானம் ஈட்டி வருகிறது மாநகராட்சி.