
‘இந்தியா வெற்றி!’
இந்திய அணி ஓவலில் ஒரு சரித்திர வெற்றியைப் பெற்றிருக்கிறது. நிஜமாகவே சரித்திர வெற்றிதான். ஏனெனில், இந்தத் தொடருக்கு முன்பாக சீனியர்கள் கூட்டாக ஓய்வு பெற்றனர். புதிய கேப்டனோடு இளம் வீரர்களோடு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி எப்படியும் தோல்வியைத்தான் தழுவப் போகிறது என்பதுதான் பலருடைய கணிப்பாகவும் இருந்தது. அதையெல்லாம் மாற்றி தொடரை 2-2 என டிரா செய்திருக்கின்றனர்.
ரிசல்ட்டை கடந்து இந்திய அணி கடுமையாக போராடியிருக்கிறது. எந்தத் தருணத்திலும் எதையும் எளிதாக விட்டுக் கொடுத்துவிடவில்லை. 5 டெஸ்ட் போட்டிகளுமே ஐந்தாவது நாள் வரை சென்றிருக்கிறது. இதுதான் இந்தியாவின் போராட்டக் குணத்துக்கான சான்று.
நடந்து முடிந்திருக்கும் 5 போட்டிகளிலும் ஓவல் ஒரு உச்சம். திடுக் திருப்பங்களை கொண்ட பரபர திரில்லரைப் போல இந்த ஆட்டம் இருந்தது. அந்த எதிர்பாராத திருப்பங்களில் புகுந்து ஆட்டத்தை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியது சிராஜ்தான். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தும் போட்டியை விடுவதாக இல்லை. வெற்றிக்கு 17 ரன்கள்தான் தேவை. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருக்கிறது. கிறிஸ் வோக்ஸூக்கு ஒரு கை உடைந்திருக்கிறது. உடைந்த கையை கட்டி டீசர்ட்டுக்குள் பொதிந்து கொண்டு ஒற்றைக் கையில் கடைசி விக்கெட்டுக்கு பேட்டிங் ஆட வந்தார்.
‘சிராஜ் 5 விக்கெட் ஹால்…’
ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து அவர் இறங்கி வந்த காட்சியே இங்கிலாந்து அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்தது. வோக்ஸை நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நிறுத்திவிட்டு அட்கின்சன் பேட்டை சுழற்ற ஆரம்பித்தார். சிக்சரெல்லாம் அடித்தார். டார்கெட் நெருங்கியது. இங்கிலாந்து வெறும் 7 ரன்கள்தான் தேவை. ஒரே ஒரு பெரிய ஷாட் போதும், போட்டியை முடித்துவிடலாம். அப்படியொரு தருணத்தில்தான் சிராஜ் வெற்றிக்கணையை இறக்கினார்.

146 கி.மீ வேகத்தில் நறுக்கென ஒரு யார்க்கர். ஸ்டம்புகள் சிதறின. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றி. சிராஜூக்கு 5 விக்கெட் ஹால். மேட்ச் வின்னராக ஜொலித்த சிராஜூக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
‘கேட்ச்சை விட்ட சிராஜ்!’
கடைசி நாள் தொடங்குவதற்கு முன்பாக இந்திய ரசிகர்கள் சிராஜ் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஏனெனில், நேற்று ஹாரி ப்ரூக்குக்கு ஒரு கேட்டை பிடித்து பவுண்டரி லைனில் காலை வைத்து சொதப்பியிருப்பார். அந்த வாய்ப்பு கிடைத்த பிறகுதான் ஹாரி ப்ரூக் வெளுத்தெடுத்து போட்டியை இங்கிலாந்து பக்கமாக மாற்றினார். போட்டியை இங்கிலாந்து வென்றிருந்தால் மொத்த பழியும் சிராஜின் மீது விழுந்திருக்கும்.

‘ஹாரி ப்ரூக்குக்கு நான் விட்ட கேட்ச் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு, அவர் டி20 -க்களில் ஆடுவதைப் போல ஆடினார். என்னால் இந்த நிலையை மாற்ற முடியும், போட்டியை வென்று கொடுக்க முடியும் என நம்பினேன். காலையில் எழுந்தவுடன் “Believe’ என்று வைத்திருந்த மொபைல் வால்பேப்பர் பார்த்து மனதில் நிறுத்திக் கொண்டு வந்தேன். இந்தத் தருணம் அற்புதமானது. ஒவ்வொரு வீரரும் இதற்காக போராடியிருக்கிறோம்.’ என்றார் சிராஜ்.
‘சிராஜை பாராட்டும் எதிரணி வீரர்கள்!’
சிராஜின் நம்பிக்கை இந்தியாவில் சாதிக்கத் துடிக்கும் சாமானிய இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நம்பிக்கை. அவருடைய பின்னணி அப்படியானது. அவர் நம்மிலிருந்து புறப்பட்டுச் சென்று இந்திய அணியை அடைந்தவர். ‘சிராஜ் போர் வீரரைப் போன்றவர். அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நினைக்க வைப்பவர்.’ சிராஜ் குறித்து ரூட் சொன்னது இது. சிராஜ் குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசியதிலும் அத்தனை உண்மை இருந்தது. ‘சிராஜ் மீது எப்போதும் எனக்கு பெரிய நம்பிக்கையும் வியப்பும் உண்டு. ஒரு தேசத்துக்காக ஆடுவது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை உணர்ந்த வீரர்களில் ஒருவர். ஒவ்வொரு முறையும் அவர் அடுத்தக்கட்டத்தை நோக்கி முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்.’ என ஸ்டோக்ஸ் வியந்து பாராட்டுகிறார்.
‘தந்தையின் மரணம்…’
கிடைத்த வாய்ப்பில் எதையாவது செய்துவிட வேண்டும் என்கிற எத்தனிப்பு சிராஜூக்கு எப்போதுமே இருக்கும். 2020 -ல் கொரோனா சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் சிராஜூம் இடம்பெற்றிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு அது பெரிய வாய்ப்பு. ஆனால், துரதிஷ்டவசமாக அந்த சமயத்தில் அவருடைய தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
‘மீளாத் துயர்!’
சிராஜின் தந்தை ஒரு ஆட்டோக்காரர். எளிய குடும்பங்களின் தந்தைகளைப் போல அவருக்கும் தன் மகனை ஆளாக்கிப் பார்க்க வேண்டும் என்கிற கனவுகள் உண்டு. ‘நீ பெரிய வீரனாகி இந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.’ என சிராஜிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அப்படியிருக்க தந்தையின் இறப்பு சிராஜை நொறுக்கிப் போட்டது. அது கொரோனா காலம். குவாரண்டைன் எல்லாம் தீவிரமாக பின்பற்றப்பட்டது. சிராஜால் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா வர முடியாத நிலை. அறைக்குள்ளேயே இருக்கிறார். கண்ணீர் வற்ற வற்ற அழுது துடிக்கிறார்.
மறுநாள் விடிகிறது. தன்னுடைய உடைமைகளை தூக்கிக் கொண்டு பயிற்சிக்கு கிளம்பினார். இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சிராஜை அழைக்கிறார். தோளில் கைப்போட்டு, ‘உன் தந்தை உன்னுடன் இருப்பார். அவர் உன்னை ஆசிர்வதிப்பார். இந்தத் தொடரில் நீ சிறப்பாக செயல்படுவாய்.’ என ஆறுதல் வார்த்தை கூறி அனுப்பினார்.

‘சாதிக்கத் தொடங்கிய சிராஜ்’
பிரிஸ்பேன் டெஸ்ட் நடக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா வெல்லவே செய்யாத மைதானம் அது. அந்தப் போட்டியை வென்றால்தான் இந்திய அணி தொடரை வெல்ல முடியும். பும்ரா இல்லை, ஷமி இல்லை. அணியின் சீனியர் வீரர்களுக்கெல்லாம் காயம். மலைபோல் நிற்கிறது ஆஸ்திரேலியா. ஆனால், சிராஜ் அசரவில்லை. வழக்கம்போல எதையாவது செய்ய வேண்டும் என்கிற எத்தனிப்பு அவரிடம் வெளிப்பட்டது.
வாய்ப்பின் அருமையை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு செகண்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட் ஹால் எடுத்தார். இந்திய அணி வரலாற்று வெற்றிப் பெற்றது. வெற்றிப் புன்னகையோடு அவரின் தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வந்து கண்ணீர் சிந்தினார். குறிப்பிட்ட அந்தக் காலக்கட்டம் சிராஜூக்கு எத்தனை மன உறுதியைக் கொடுத்திருக்கும்? அந்த மன உறுதியின் வெளிப்பாடுதான் அணிக்கான சிராஜின் எத்தனிப்புகள்.
‘பும்ரா மீதான எதிர்பார்ப்பு!’
இந்த இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அத்தனை பேச்சுகளும் பும்ராவை சுற்றியே இருந்தது. பும்ரா எத்தனைப் போட்டிகளில் ஆடுவார்? என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால், பும்ரா Factor இந்த முறை வொர்க் ஆகவில்லை. பும்ராவால் போட்டியை மாற்றக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. மலையளவு நம்பப்பட்ட பும்ரா ஏற்படுத்தாத தாக்கத்தை சிராஜ் ஏற்படுத்தினார்.
‘ஐந்து போட்டிகளிலும் ஆடி இன்னமும் தொடர்ச்சியாக 135 கி.மீ வேகத்தில் வீசும் சிராஜை பாராட்டியே ஆக வேண்டும்.’ என ஹாரி ப்ரூக் பேசியிருக்கிறார். ‘Workload’ என்பதைப் பற்றி இந்தத் தொடரில் இரண்டு அணிகளுமே கவலைப்பட்டன. ஸ்டோக்ஸ் ஒரு கட்டத்தில் எங்களின் பௌலர்களை நாங்கள் காக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் நாங்கள் திட்டமிட வேண்டும் எனப் பேசினார். ஏனெனில், நடந்த அத்தனைப் போட்டிகளும் ஐந்து நாள்கள் நடந்திருக்கிறது. சமீபகாலத்தில் இது அரிய நிகழ்வு.
ஐந்து போட்டிகளையும் சேர்த்து சிராஜ் மட்டும் 1113 பந்துகளை வீசியிருக்கிறார். ஓவராக பார்த்தால் 185.3 ஓவர்கள். இரு அணியிலும் சேர்த்து வேறெந்த வீரரும் இத்தனை ஓவர்களை வீசியிருக்கவில்லை. 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்தத் தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் அவர்தான். பும்ரா ஏற்படுத்தியிருக்க வேண்டியதை, அவர் செய்யாமல் விட்டதை சிராஜ் அப்படியே செய்தார்

சிராஜின் எத்தனிப்பைப் பற்றி பேசுகையில், அது தனிப்பட்டு அவருக்கானது அல்ல. அணிக்கானது என்பதையும் குறிப்பிட வேண்டும். சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட்டில் அஷ்வின் சதமடிப்பார். அப்போது அஷ்வினுக்கு முன்பாக துள்ளிக் குதித்து கொண்டாடியது சிராஜ்தான். அஷ்வின் இந்தச் சம்பவத்தை அடிக்கடி சொல்லிச் சொல்லி நெகிழ்வார். லார்ட்ஸ் டெஸ்ட்டில் கையில் விக்கெட் இல்லாமல் பரபரப்பான கட்டத்தை ஆட்டம் எட்டியிருந்த போதும், ஜடேஜா சிராஜூக்கு ஸ்ட்ரைக் கொடுத்து கொண்டே இருப்பார். ஏனெனில், ஜடேஜாவுக்கு சிராஜின் மனவலிமையைப் பற்றியும் விடாப்பிடிக் குணத்தைப் பற்றியும் தெரியும்.

‘கனவை நிறைவேற்றிய மகன்!’
ஓவலில் ரசிகர்களும் சக வீரர்களும் சூழ ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு அந்த பதக்கத்தை முத்தமிடும் சிராஜை பார்க்கையில் அவருடைய தந்தைதான் ஞாபகம் வருகிறார். அவரின் விருப்பப்படியே சிராஜ் பெரிய வீரரும் ஆகிவிட்டார். நாட்டிற்கு பெருமையும் சேர்த்துவிட்டார். அன்பின் வடிவாய் சிராஜை சுற்றியிருக்கும் அவரின் தந்தையின் ஆன்மா மகிழ்ந்திருக்கும். வாழ்த்துகள் சிராஜ்!