
ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப் பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கும் நிலை உள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. தற்போது கேரள, தமிழக எல்லையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மூல வைகையில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் விநாடிக்கு 1,867 கனஅடி நீர் கடந்த 20-ம் தேதி முதல் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.