
பிளஸ் 2 முடித்து 30 ஆண்டுகள் கழித்து தனது மகள் நீட் தேர்விற்குத் தயாராகும் போது அவருடன் சேர்ந்து ஆறு மாதங்களாக நீட் தேர்வுக்குத் தயாராகியிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த 49 வயதான அமுதவள்ளி. இவர் தற்போது விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் படிக்க இருக்கிறார்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூலை 30-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு அடிப்படையிலான இந்த மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் உள்ள 37 அரசுக் கல்லூரிகளில் 4,336 இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 2,264 அரசு உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மேலும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,583 பிடிஎஸ் படிப்பிற்கான இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வைத் துவங்கியுள்ளது.
இதில் முதலாவதாக சிறப்புப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கிட்டிற்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த 49 வயதான அமுதவல்லி நீட் தேர்வில் 147 மதிப்பெண் பெற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார்.
மருத்துவம் சேர்ந்த மகிழ்ச்சியில் அமுதவல்லி கூறுகையில், “12 ஆம் வகுப்பு முடித்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட எனக்கு பிசியோதெரபி பயில வாய்ப்பு கிடைத்தது. நானும் பிசியோதெரபி பயின்று பணியாற்றி வருகிறேன்.
தற்போது எனது மகள் சம்யுக்தா கிருபாளினி நீட் தேர்விற்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, ஆறு மாதங்களாக மகளுடன் சேர்ந்து நீட் தேர்வுக்குப் படித்துத் தேர்வு எழுதினேன். தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயில இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கனவை நினைவாக்கிய எனது மகளுக்குத்தான் அத்துணை பெருமையும் சேர வேண்டும்” என்றார்.
கூடுதல் மகிழ்ச்சியாக அமுதவள்ளியின் மகள் சம்யுக்தா கிருபாளினி நீட் தேர்வில் 450 மதிப்பெண்கள் பெற்று கலந்தாய்வில் பங்கேற்க உள்ளார். இவருக்கும் வாய்ப்பு கிடைத்து தாயும், மகளும் ஒரே ஆண்டில் மருத்துவம் பயில இருக்கிறார்கள்.