• August 4, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பாரியைப் பற்றி நான் அறிந்த ஒன்று, ” கடையேழு வள்ளல்களில் ஒருவன், முல்லைக்கு தேர் கொடுத்தவன்”.   ஆனால் வேளிர் குல வேள்பாரி நான் பிரமித்த ஒருவன். அவனுடைய  குடிப்பெருமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அதே அளவு அவனை நாடி வந்த அனைத்து குடிகளுக்கும் அளித்து, அவர்களைக் காத்து, ஒன்றிணைத்து, வழிநடத்தி வாழவைத்து வாழ்ந்தவன்…

 மூவேந்தர்களும் அவன் புகழின் மீது, அவன் நாட்டின் வளமை மீது  பொறாமை கொண்டு அவனை அழிக்க பல வழிகளில் முயற்சி செய்ய போதும், அதை எளிமையாக முறியடித்து, அவர்களைத் தெறிக்க விட்டவன்…. எளிய மக்களின் மனங்கவர் பறம்பின் வேள்பாரி.

 மன்னர்களின் பேராசையால், குடிகள் அழியும் போது, ஏன் இவ்வாறு செய்தார்கள் என்று என் மனம் மிக வேதனையும் சீற்றமும் அடைந்தது, நானும் அக்குடியில் ஒருத்தி போல. வேள்பாரி அவர்களுக்கு அடைக்கலம் தந்தது, நான் அவனுக்கு நன்றிக்கடன் பட்டது போல உணர்ந்தேன். எம் மூதாதையர்களை காத்தவன் இவனே என்று. 

அறிவிற்சிறந்த, மன்னர்கள்  போற்றிய, சுகவாழ்வு கண்ட  கபிலர், இயற்கையை நேசித்த ஒருவனுடன் இயற்கையுடன்,  அவர்களுள் ஒருவனாக ஒன்றியதை, விவரித்த நடை அழகு. 

ஒரு அத்தியாயத்தில், எங்கோ ஒரு மூலையில், சொல்லப்படும், ஒரு வார்த்தையோ ஒரு நிகழ்வோ ஒரு வருணனையோ,  பின்வரும் பாகத்தில் விவரிப்பது ஆச்சர்யப்பட வைக்கிறது. அதிசயப்பட வைக்கிறது. 

வீரயுக நாயகன் வேள்பாரி – 110

இயற்கை அறிவு, வானியல் அறிவு,  போர்த்திறம், வீரம் என பல இடங்களில் நம் தமிழரின் பெருமை மிகுந்த வாழ்க்கை, என்னை ஏங்க வைக்கிறது. நான் ஆதினியா, மயிலாவா, குலபெண்டிரா இல்லை ஏதேனும் ஒரு மாந்தராக இருந்திருக்க மாட்டேனா என்று.  

காதலர்களே ஆனாலும், தனிமை கிடைத்த போதும், எல்லை மீறாத காதல், போரில் விதிகளை கடைபிடிக்கும் மரபு, வாக்கை காப்பாற்றும் தன்மை, சொன்னவுடன் சாகும் வேகம், தலைவன் மீதான அன்பு மற்றும் நம்பிக்கை, பெண்களை மதித்தல், இயற்கையை அதன் தன்மை அறிந்து அதன் வழி உபயோகித்துக் காத்தல் என பறம்பு மக்களின்  ஒவ்வொரு அம்சமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 

பாரியின் கருணை பெரிதா.. காதல் பெரிதா.. வீரம் பெரிதா.. விவேகம் பெரிதா.. அவன் அன்பு பெரிதா.. பெரியோர்பால் கொண்ட மரியாதை.. பெரிதா.. இயற்கையறிவு பெரிதா… எனப் பார்க்கின், அவனின் ரசிகையாக அவனை ரசிக்க மட்டுமே முடிகிறது. அவனே பெரியவன், அனைத்திலும் பெரியவன்.  பின் அதில் என்ன பாகுபாடு.

கதையில் வந்த விலங்குகளையும் தாவரங்களையும், பலவற்றை இப்போது பார்க்க முடியாமல் போனாலும், கதை சொல்லும் உத்தி நம்மை உள்ளதை, உள்ளவாறு கற்பனை செய்ய உதவுகிறது. இப்படி ஒரு உயிரினம் இருந்ததா என பல திகைக்க வைக்கின்றன. சில நடுங்க வைக்கின்றன. 

பறம்பினை பாரி காத்தானா…. பாரியை பறம்பு காத்ததா…..இல்லை இயற்கை இருவரையும் இணைத்து வைத்து காத்ததா….. என என் அறிவின் வழி அறிய முடியவில்லை. 

பாரியின் பக்கம் நின்ற கபிலருக்கு அவன் மக்கள் தந்த மரியாதை, அன்பு, முழுமனதாக அவரை தங்களில் ஒருவனாக ஏற்று நடத்தும் பாங்கு போன்றவை  உள்ளம் உருக வைக்கும். ஆனால் அதே வேளையில், திசைவேழர்…… மனம் பதைக்க வைத்தது. அவர் எடுத்த முடிவு அவருக்கு சரியே…. எனினும் தண்டனை நமக்கே… 

எத்தனை எத்தனை வகை விலங்குகள்,  தாவரங்கள் ( காக்காவிரிச்சி, ஆட்கொல்லி மரம், …) ….   அவற்றின் பயன்பாடுகள், குடிமக்களின் பெயர்கள், ஒவ்வொரு குடிகளின் தனிப்பட்ட சிறப்புகள், அதனை நேர்த்தியாக எடுத்துரைத்த விதம், இயற்கை அழகினை படிப்பவரும் பருகும் விதம் சொல்லிய பாங்கு, போரினை உணர்ச்சிமயமாக விவரித்த போக்கு… என  ஒவ்வொன்றும் முந்தி நிற்கின்றன.

கீதானி, அலவன், கொற்றன், அகுதை, இரவாதன், தேக்கன், பழையன்,  பொற்சுவை… இவர்களின் பகுதி கதையில் முடிந்திருந்தாலும், மனதை விட்டு அகலாமல்  நம்முடனேயே  இறுதி வரை வருகிறார்கள்.

வீரயுக நாயகன் வேள்பாரி – 109

நீலன்…. சாமர்த்தியன். மயிலாவின் மனமறிந்து நடந்த நல்ல துணைவன். தலைவனுக்கு சிறந்த தளபதி. அவன் முன்னோருக்கு சிறந்த காப்பாளன். கபிலருக்கு…. என்றுமே அவன் வியப்பை தருபவன். பாரி பற்றிய கேள்விகளுக்கு அவன் பாடும்  “பனையன் மகனே… ” பாடலே சாட்சி…. 

ஆதினி… தலைவன் நல்லவனாக இருக்க வேண்டுமெனில், தலைவி.. அறிவிற்சிறந்தவளாக, பண்புள்ளவளாக, தலைவன் மேல் தீராக் காதல் கொண்டவளாக இருக்க வேண்டும்… பாரியோ, பார் புகழும் வெற்றிவீரன்.   அவன் மனைவி.. குலத்தலைவி அல்லவா…கொடுத்து வைத்தவன் பாரி.   

ஒரு புதிய வார்த்தை அல்லது ஏதேனும் ஒரு உயிரினத்தைப் பற்றி படிக்கும் போது, இணையவழி அதன் தோற்றத்தை தேடும் நான், இந்நூலைப் படிக்கும் போது, எழுத்தாளர் வழி, அவர் எழுத்தின் தன்மை மற்றும் திறமை வழி நானே கற்பனை செய்து பார்த்தேன் இது இப்படித் தான் இருந்திருக்கும் என்று…. அத்தகைய மொழித்திறன் கையாடல் ஆசிரியருடையது……

யாரேனும் ஒருவரை மட்டும் ரசித்து பின்தொடர இயலவில்லை. சிறு புல், பூண்டு கூட முக்கிய பங்கு வகிக்கையில், பறங்கி மக்களை இயற்கையில் இருந்து  பிரித்துப் பார்க்க  முடியவில்லை. சேர , சோழ, பாண்டியர்கள் எதிரிகளாக இருந்தாலும், அவர்களின் போர்த்திறமை, வாணிக யுக்தித் திறன் குறைத்து மதிப்பிடப்படவில்லை. இதன் மூலம் தமிழரின் பெருமையும் உலகறிய முடியும். 

இந்த நூலில், நான் வியந்த காட்சிகளும் அதிகம், காதல் காட்சிகளால் மகிழ்ந்ததும் அதிகம். சில இடங்களில் பொருள் புரிந்து வெட்கம் கொண்டதும் உண்டு. தமிழின் ஆதிக்கத்தை மட்டுமே முற்றிலுமாக வியந்து, ரசித்து, அனுபவித்து மகிழ்கிறேன்.  

கதையில், நேரடியான சொல் ஆதிக்கமோ, மறைமுகமான குறிப்போ… எதிரே இருப்பவருக்கு என்ன உணர்த்த  வேண்டுமோ, அதைப் பற்றிய அறிவு, தெளிவாக வாசகருக்கும் உணர்த்தப் படுகிறது. எந்த சூழ்நிலையும், அந்த இடத்தில் நம்மை பொருந்திப் போக வைக்கிறது. இது எழுத்தாளரின் மொழி வன்மையை உலகிற்கு செவ்வனே எடுத்துரைக்கிறது. 

 வேள்பாரி நூலைப் படிக்கப் படிக்க, ஒரு பெருமிதம் ஏற்படுகிறது. நான் இதை படிக்கிறேன் என்று… படித்து விட்டேன் என்று… இப்புத்தகம் என்னிடமும் இருக்கிறது என்று… நீங்களும் படியுங்கள் என்று என் சக ஆசிரியர்களிடம் இதைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.  வேள்பாரி பற்றி விவாதிக்க அல்ல, ரசிக்க, வாசிக்க,  இயற்கையை அறிய, அனுபவிக்க, தமிழில் கரைய……

நன்றி.

ம. மகேஸ்வரி,

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *