
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அய்யலூர், சுக்காவழி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையக் கட்டிடத்தில் கடந்த வியாழக்கிழமையன்று, இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்து கொள்ளும்படி மருத்துவர்கள், செவிலியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யவில்லை என்றால் எத்தனை நாட்கள் ஆனாலும் தங்களை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற மாட்டோம் எனத் தெரிவித்ததாகவும் தொலைபேசியின் மூலம் கணவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் இருக்கும் ஜெயலட்சுமி, துணைக்குக் கூட ஆள் இல்லாத நிலையில் இருந்து வருகிறார். ஜெயலட்சுமியின் தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 48 நாள்களுக்குப் பின் மருத்துவமனைக்கு வந்து குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்வதாகத் தெரிவித்தும் அதனை ஏற்றுக்கொள்ள மருத்துவர்கள் மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, “அப்படி எதுவும் சொல்லவில்லை, நாங்கள் ஜெயலட்சுமியை டிஸ்சார்ஜ் செய்து விட்டோம்” என்று குற்றச்சாட்டி மறுத்துள்ளனர்.