
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், வயர்லெஸ் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தாததற்கான காரணத்தை வெளியிட்டு, சமூக ஊடக பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஸ்டீபன் கோல்பர்ட்டின் டாக் ஷோவில் சமீபத்தில் பேசிய ஹாரிஸ், வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் குறித்து கூறியிருக்கிறார்.
அந்த டாக் ஷோவில் தனது புதிய புத்தகமான ’107 நாள்கள்’ என்ற புத்தகத்தில் இருந்து முன்பு வெளியிடப்படாத சில புகைப்படங்களைப் பகிர்ந்தார்.
ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்தன.
இந்த அழைப்புகளை எடுக்க, அவர் வயர்டு இயர்ஃபோன்களை மட்டுமே பயன்படுத்தியதாகவும், வயர்லெஸ் தொழில்நுட்பத்தைத் தவிர்ப்பதற்கான காரணத்தையும் விளக்கினார்.
“நான் செனட் உளவுத்துறை குழுவில் பணியாற்றியவள். ரகசியமான ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டவள், ரயிலில் பயணிக்கும்போது உங்கள் இயர்பாட்களைப் பயன்படுத்தி, உங்கள் உரையாடலை யாரும் கேட்க முடியாது என்று நினைக்க வேண்டாம். வயர்டு இயர்ஃபோன்கள் சற்று பாதுகாப்பானவை” என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலானது. அதாவது வயர்லெஸ் இயர்பாட்கள் மூலம் அரசு உரையாடல்களைக் கேட்கலாம் என்ற கருத்து தான் பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேர்காணலில், 2026 ஆம் ஆண்டு கலிபோர்னியா ஆளுநர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்ற தனது முடிவையும் கமலா ஹாரிஸ் கூறியிருக்கிறார்.