• August 4, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில், மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை திமுக மேற்கொண்டு வந்தது . இதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடமிருந்து ஆதார் எண், அவர்களது அலைபேசி எண் மற்றும் அதன் ஒடிபி ஆகியவற்றை பெற்று வந்தனர்.

இதற்கு எதிராக அதிமுக நிர்வாகியான ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனிநபரின் பாதுகாப்பு விஷயங்களில் பிரச்னை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் இந்த OTP பெறுவதை எதற்காக திமுக மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து வாங்கும் இத்தகைய முக்கிய தகவல்கள் எவ்வாறு பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றது? இந்த தகவல்களை வெளியே கசிந்து விட்டால் அதற்கு யார் பொறுப்பு? என கேள்விகள் எழுப்பியதோடு,  ஓடிபி பெறுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்

ஓரணியில் தமிழ்நாடு – ஸ்டாலின்

 இந்த உத்தரவுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதிகள் பி.எஸ் நரசிம்மா மற்றும் சந்துருக ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `செல்போன் மற்றும் ஆதார் எண் ஓடிபி ஆகியவற்றை பெறும் விவகாரத்தில், பொதுமக்களை யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. பொதுமக்கள் அவர்களாக முன்வந்து தான் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள். தற்போதைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் ஓலா உபேர் போன்ற வாடகை காரில் பயணம் செய்வதற்கு கூட otp என்பது பெறப்படுகின்றது. மேலும் இது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்காகும். ஆனால் அதை பொதுநல வழக்காக மனுதாரர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருக்கிறார்.  

இவை எதையும் கவனத்தில் கொள்ளாமல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து இருக்கிறது எனவே இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என வாதங்களை முன்வைத்தார்.

அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நீங்கள் நாடியது ஏன்?

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ ஒவ்வொரு தனி நபர்களின் தனி உரிமை சார்ந்த விவகாரங்களில் மக்களை பாதுகாக்கும் பொறுப்பு என்பது நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. இந்த விஷயம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்னமும் நிலுவையில் இருக்கும் நிலையில், அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நீங்கள் நாடியது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை விசாரித்து முடிப்பதற்குள் என்ன அவசரம்?” என கேள்வி எழுப்பியதோடு திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

மேலும் மனுதாரருக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தையே நாடலாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *