
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரயாக்ராஜ் நகரின் தாராகஞ்ச், ராஜாபூர், சலோரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 1,400 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் சந்திரதீப் நிஷாத் சமூக வலைதளத்தில் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அத்துடன், “இன்று காலை (நேற்று) பணிக்கு புறப்பட்டபோது, தாய் கங்கா என் வீட்டுக்கு வந்திருந்தார். என் வீட்டு வாசலிலேயே அவரை வணங்கி ஆசி பெற்றேன்’’ என பதிவிட்டுள்ளார்.