
Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் புதினா உப்பு, ஓம உப்பு என்று விற்கிறார்கள். அந்த உப்பைத் தடவினால் உடல் வலிகள் சரியாகும் என்கிறார்கள். இது உண்மையா, இந்த மருந்துகளைப் பயன்படுத்தலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புதினா உப்பை ‘மென்த்தால்’ (Menthol) என்றும், ஓம உப்பை ‘தைமால்’ (Thymol) என்றும் குறிப்பிடுவோம். அதாவது மென்த்தால் என்பது புதினா செடியிலிருந்து பெறக்கூடிய சேர்மம், தைமால் என்பது தைம் செடியிலிருந்து பெறக்கூடிய சேர்மம்.
மென்த்தால் எனப்படும் புதினா உப்பும், தைமால் எனப்படும் ஓம உப்பும் நாம் பயன்படுத்தும் இருமல் மருந்துகளில், சோப்புகளில், வலி நிவாரண தைலங்களில், அழகு சாதனங்களில், டூத் பேஸ்ட்டில் எல்லாம் பயன்படுத்தப்படுவை. ஆனால், இவை இயற்கையான முறையில் பெறப்படுகின்றனவா, செயற்கையாகப் பெறபப்டுகின்றனவா என்பதைப் பார்த்து உபயோகிக்க வேண்டியது முக்கியம்.
உதாரணத்துக்கு, கற்பூரம். அது இயற்கையாகப் பெறப்பட்டாலும், அத்துடன் கூட்டுப் பொருள்கள் சேர்த்து வணிகரீதியாக விற்கிறார்கள். அப்படித்தான் இந்த மென்த்தால், தைமாலையும் செயற்கைப் பொருள்கள் சேர்த்து விற்கிறார்கள்.
இயற்கையான பொருள்களுக்கு இருக்கும் மருத்துவ குணங்கள், செயற்கையான பொருள்களுக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் இவற்றின் இயற்கைத் தன்மையில் கவனம் வேண்டும்.

நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாகக் கிடைப்பதால், மக்கள் நேரடியாக அவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்தும் பல பொருள்களும் இயற்கையானவையா, செயற்கையானவையா என அவர்களால் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாது.
மென்த்தால், தைமால் இரண்டும் பார்ப்பதற்கு பச்சைக் கற்பூரம் போன்று இருக்கும். அத்துடன் பூங்கற்பூரமும் சேர்க்கப்படும். பூங்கற்பூரம் என்பது இயற்கையாகக் கிடைக்கக்கூடியது, மருத்துவத்தில் பயன்படுத்தக்கூடியது. வில்லைகள் போல இல்லாமல், ஒழுங்கற்ற வடிவில் இருக்கும்.
இந்த மூன்றையும் வாங்கி, சம அளவு எடுத்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். ஒருநாள் இரவு இப்படி வைத்தால், கட்டியாக இருந்த மூன்றும் மறுநாள் காலையில் கரைந்து திரவ வடிவத்துக்கு மாறியிருக்கும். உங்களில் பலரும் கோடாலி தைலம் பயன்படுத்தியிருப்பீர்கள். கிட்டத்தட்ட அந்தப் பதத்தில்தான் இது மாறியிருக்கும். இதை சித்த மருத்துவத்தில் ‘மின்சார தைலம்’ என்று சொல்வோம்.
மென்த்தால், தைமால், கற்பூரம் மூன்றும் கலந்த கலவை ரொம்பவே ஸ்ட்ராங்காக இருக்கும். அதை நேரடியாக எடுத்துத் தடவக்கூடாது. 100 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெயில், இந்த மூன்றும் கலந்த கலவையை 10 முதல் 20 மில்லி அளவு கலந்து, நீர்க்கச் செய்துதான் பயன்படுத்த வேண்டும். வலி, வீக்கம் போன்றவற்றுக்கு வெளிப்பூச்சாகப் பயன்படுத்தலாம். மார்புச்சளி, இருமல் போன்றவற்றுக்கும் இதை முதுகு மற்றும் நெஞ்சுப் பகுதியில் லேசாகத் தடவிக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெயில் சரியான அளவு கலந்ததை மட்டுமே இப்படிப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் முன் மருத்துவ ஆலோசனை அவசியம்.
இந்த மருந்தைச் செய்வதில் உங்களுக்கு குழப்பமோ, பயமோ இருந்தால், சித்த மருத்துவர்களை அணுகலாம். அவர்கள் சரியான முறையில் தயாரித்துக் கொடுப்பதை வாங்கிப் பயன்படுத்தலாம். கைவைத்தியம்தானே என்ற எண்ணத்தில் நீங்களாகவே கன்னாபின்னா காம்பினேஷனில் தயாரிப்பதோ, அளவு தெரியாமல் உபயோகிப்பதோ விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.