
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒளிபரப்பப்பட்ட காணொளியில், “அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், “கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.
ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய சூர்யா, “நான் அகரம் ஆரம்பிக்கும் போது 35 வயது இருக்கும். ஆனால், நீங்க 20, 22 (அகரம் முன்னாள் மாணவர்கள்) வயசுல சமுதாயத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டீர்கள்.
இப்போது அகரத்தை அகரம் முன்னாள் மாணவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
படித்ததையும் பெற்றதையும் பல மடங்காக திரும்ப கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

என் அப்பாவுக்கு உதவி செய்தது தூரத்து சொந்தக்காரர் ஆறுமுகம். அப்பாவை 15 வயசுல கிராமத்திலிருந்து இங்க கூட்டிட்டு வந்து வழிகாட்டிருக்காரு.
அந்த மாதிரி அகரம் உருவாகுவதற்கு ஏகப்பட்ட வழிகாட்டிகள் இருக்கிறார்கள்.
எனக்கு பெர்சனலா அப்படி ஒரு முக்கியமான வழிகாட்டி இருக்கிறார்.
இந்த விரலுக்கு (ஆள்காட்டி விரல்) நிறைய அர்த்தங்கள் சொல்லலாம். கேள்வி கேட்கின்ற விரல், குறை சொல்கின்ற விரல், மிரட்டுகிற விரல் என்று சொல்லலாம்.
ஆனால், இதே விரலைக் கீழே காண்பித்தால், நான் இருக்கேன் விரலைப் பிடித்துக் கொள் என்று கூட்டிட்டு போகும்.
அந்த விரல் எனக்கு என்னுடைய அண்ணா, சித்தப்பா கமல் சார்.
என்னோட ரூம்ல கமல் சார் போட்டோ ஒட்டி வச்சிருக்கேன். நாயகன் படம் பார்த்துட்டு மீசை எடுத்திருக்கிறேன்.

இப்போ எங்களுக்கு நடுவுல இப்படி ஒரு உறவு கிடைக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை.
ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக மாற்றியது அவர்தான். நான் வேற தொழிலில் இருந்திருந்தாலும் என்னுடைய இலக்கை நான் தொடுவதற்கு அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பார்.
அவர் சொன்ன மாதிரி, `அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகத்தில் ஏராளம்’. நினைக்கின்ற கனவு நிச்சயம் நிறைவேறும்.” என்று கூறினார்.