• August 3, 2025
  • NewsEditor
  • 0

மிதுனும் (கதிர்) அனந்துவும் (ஹக்கீம் ஷா) இணை பிரியாத நண்பர்கள். ஜிகிரி தோஸ்தாக இருக்கும் இவர்கள் இருவரும் அவர்களுடைய ஊரில் அரசியல் பிரமுகராக இருக்கும் ரகுவுக்கு (ஜியோ பேபி) விஸ்வாசமாக இருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான மிதுன் தன்னுடைய ஊரை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுச் செல்ல விரும்பி, புரட்சியை கையில் எடுக்கிறார்.

ஆனால், அரசியல் பிரமுகர் ரகுவுக்கு மிதுனின் இந்த செயல்கள் பிடிக்கவில்லை. அதனால் அவருக்கும் மிதுனுக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.

Meesha Review

மிதுனுடன் போராட்டத்திற்கு முதலில் துணை நிற்கும் அனந்து, ஒரு கட்டத்தில் தான் ஓரங்கட்டப்படுவதாக நினைத்து ஈகோ கொண்டு, மிதுனுக்கு எதிராக சில சூழ்ச்சிகளைச் செய்கிறார்.

இப்படி பல துரோகங்கள் தனக்கு இழைக்கப்பட்ட பிறகு, வனத்துறை காவல் அதிகாரியாகப் பணியில் சேர்கிறார் மிதுன். அங்கும் இவரை விடாது துரத்தும் சூழ்ச்சிகள், இவரின் வாழ்க்கையை எங்கு கொண்டு சென்றது என்பதே இந்த ‘மீஷா’ படத்தின் கதை.

நண்பனுக்கு உற்ற துணையாக வருமிடத்திலும், ஊர் மக்களின் வளர்ச்சிக்காக புரட்சி செய்யுமிடத்திலும், துரோகம் செய்தவர்களுக்கு எதிராகப் பகையுணர்ச்சியை வெளிப்படுத்துமிடத்திலும் நடிப்பில் வேட்டையாடி விளையாடியிருக்கிறார் கதிர். இது கதிருக்கு நல்லதொரு மலையாள டெப்யூட்.

ஆனால், போலீஸிடம் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கப் போடும் நாடகத்தில் மட்டும் சின்ன செயற்கைத் தன்மை எட்டிப் பார்த்தது சாரே! காழ்ப்புணர்ச்சியையும், குற்றவுணர்ச்சியையும் தன்னுடைய சின்னச் சின்ன முகபாவனைகளில் வெளிப்படுத்தி, கதாபாத்திரத்திற்கு ருசி சேர்த்திருக்கிறார் ஹக்கீம் ஷா.

நண்பனிடம் ஈகோ கொண்ட இவர், உண்மை அறிந்து தன்னை மாற்றிக் கொள்ளும் சேஞ்ச் ஓவரை முதிர்ச்சியோடு கையாண்டிருக்கிறார்.

Meesha Review
Meesha Review

வேட்டைக்காரராக, தனக்கே உரித்தான ஸ்டைலில் வரும் ஷைன் டாம் சாக்கோ, சரியாக குறி வைத்து நம்மிடையே லைக்ஸையும் கைதட்டல்களையும் தட்டிப் பறிக்கிறார்.

இவருடைய கதாபாத்திரத்தின் நகர்வுகளும் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. மலையாள இயக்குநர் ஜியோ பேபி இப்படத்தில் வில்லனாக வந்திறங்கி, நல்லதொரு நடிப்பையும் தந்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.

இவர்களைத் தாண்டி, சுதி கொப்பா, ஶ்ரீகாந்த் முரளி ஆகியோர் அழுத்தமான நடிப்பைக் கொடுத்து நல்ல மார்க் பெறுகிறார்கள்!

காடு, மலை, கடலுக்கு அருகிலிருக்கும் ஊர் என, அதன் அழகியல் மாறாமல் ஏரியல் ஷாட்டில் பதிவு செய்து கண்களுக்கு விருந்தளிக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் ராஜன். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே கதை பயணிக்கிறது.

அதற்கென அமைக்கப்பட்ட சாஃப்ட் லைட்டிங்கும் இனிமையான அனுபவத்தைத் தருகிறது சேட்டா! நான்-லீனியர் வடிவத் திரைக்கதையை நேர்த்தியாகக் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் மனோஜ்.

தன்னால் முடிந்தளவுக்கு கூர்மையாக்கி, தொய்வின்றி கொண்டுச் செல்ல முயன்ற இவர், க்ளைமேக்ஸில் எங்கெங்கோ பறக்கும் காட்சிகளின் பக்கம் தன் பார்வையைக் கொண்டு சென்றிருக்கலாம்.

Meesha Review
Meesha Review

இசையமைப்பாளர் சூரஜ் குரூப்பின் பின்னணி இசை, பதைபதைப்புடன் நகரும் திரைக்கதைக்கு கூடுதல் த்ரில் சேர்க்கிறது. அதுவும் ‘Moustache’ பாடல், இந்த ராஜவேட்டை விருந்துக்கு ருசிகரம் கூட்டும் டிஷ்!

கட்சி போஸ்டர்கள், ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட போஸ்டர் ஆகிய விஷயங்களில் கலை இயக்குநரின் நேர்த்தியான உழைப்பு தெரிகிறது.

ஆனால், விலங்குகள், நீர்வீழ்ச்சிகள், மலை உச்சிப் பகுதி ஆகியவற்றின் கிராபிக்ஸ் தரம் ரொம்ப சுமாராக அமைந்திருப்பது, நல்ல விஷுவல் அனுபவத்திற்கு நோ-என்ட்ரி பதாகையைப் போட்டு மூடுகிறது.

தொடக்க ஃப்ரேமிலேயே கதைக்குள் நேரடியாகச் சென்று, நான்-லீனியர் வடிவில் குழப்பமின்றி விறுவிறுப்பாகக் கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் எம்சி ஜோசஃப்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் தீண்டாமைக் கொடுமையையும், ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு எதிராக நிற்கும் அரசியல் பிரமுகர்களின் முகத்தையும் அழுத்தமாகக் காட்சிப்படுத்திய இயக்குநருக்கு க்ளாப்ஸ்!

பழிவாங்கத் துடிக்கும் அனந்து, உண்மையை எடுத்துரைத்து நினைக்கும் மிதுன், வேட்டையாடக் களமிறங்கும் கித்தோ (ஷைன் டாம் சாக்கோ) ஆகியோரின் மோதல் புள்ளியைத் தனித்தனியாக முக்கோண வடிவில் கோர்த்திருக்கிறார்.

ஒவ்வொருவரின் கதையையும் ஓரளவிற்கு பரபரப்புடன் கொண்டு செல்ல, இயக்குநர் எழுத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

Meesha Review
Meesha Review

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் விடாமல் எழுந்துகொண்டே இருக்கும் வினாக்களுக்கு, கடைசி வரை விடை தராமல், காட்டிலேயே மூடிப் புதைத்திருக்கிறார்கள்.

சருகுமானில் கட்டப்பட்டிருக்கும் சாமி கயிறுக்கு எதற்கு பெரிதளவில் அமானுஷ்ய ஃபீலை கூட்டி கவனத்தைத் திருப்பினார்கள், அதுதான் இவர்களின் வாழ்வில் சிக்கலைக் கொண்டு வந்ததற்கு காரணமா என, முக்கியமான விஷயத்திற்கு பதில் தராதது சறுக்கல்!

பெரும் எதிர்பார்ப்புடன் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இறுதி 30 நிமிடப் படத்தை, செயற்கைத் தன்மைகள் நிரம்பிய முடிச்சுகளால் எங்கெங்கோ கொண்டு சென்று, நம்மைக் குழம்பச் செய்து பெரும் ஏமாற்றத்தையும் தருகிறார்கள்.

காடு, மலை எனப் பள்ளங்களில் பக்குவமாகப் பயணித்த ‘மிஷா’, இறுதி வரை அதே நேர்த்தியைக் கெட்டியாகப் பிடித்து கரை சேர்ந்திருந்தால், இந்த வனம் இன்னும் முழுமையான த்ரில் அனுபவத்தை நமக்குத் தந்திருக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *