• August 2, 2025
  • NewsEditor
  • 0

இந்திய இறக்குமதிகள் மீது 25 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூலை 31ம் தேதி வெளியிட்ட  அறிவிப்பு இந்திய அரசியல் மற்றும் வர்த்தக, தொழில் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது வியப்பளிக்கவில்லை. 

`அரசியல் ரீதியாக,  கடந்த சுமார் 20 ஆண்டுகளாக மேம்பட்டு வந்த இந்திய – அமெரிக்க உறவுகளை இது பாதிக்கும்’ என்ற கருத்து இருக்கிறது.  பொருளாதார ரீதியாக,  இந்த வர்த்தக வரி விதிப்பு நீடித்தால், இந்தியப் பொருளாதாரத்தின் சில குறிப்பிட்ட துறைகளை அது பாதிக்கும்.  இந்தியா தனது பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள அமெரிக்காவை மட்டும் சார்ந்திருக்காமல் மாற்று சந்தைகளைத் தேடவும் வைக்கும். 

அமெரிக்கா: இந்தியா மீது 25 சதவிகித வரி விதித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் மீது கடந்த ஏப்ரலிலேயே 29 சதவீதம் புதிய வரி விதிப்பை அறிவித்து பின்னர் சில நாட்களில் பேச்சு வார்த்தைகளுக்காக அந்த அறிவிப்பை இடை நிறுத்தி வைத்திருந்தார். 

இந்த இடைப்பட்ட காலத்தில் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை என்று கூறி ட்ரம்ப் இந்த முடிவை தனது Truth Social தளத்தில் அறிவித்திருந்தார்.  

இந்த அதிரடி அறிவிப்பை விட, அவரது சமூக ஊடக தளத்தில் அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தின. 

இந்தியா, ரஷ்யாவிடம் பொருளாதாரத் தடைகளை மீறி தொடர்ந்து எண்ணெய் வாங்கிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய ட்ரம்ப், இதற்கும் அமெரிக்கா இந்தியா மீது அபராதம் விதிக்கும் என்றார்.  ( அபராதம் குறித்த விவரங்களை அவர் அறிவிக்கவில்லை).  

ரஷ்யா, இந்தியா இரண்டையும்  “இறந்து போன பொருளாதாரங்கள்”  என்று ட்ரம்ப் வர்ணித்தது இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அந்த வர்ணனை மிகைப்படுத்தப்பட்டது,  ட்ரம்ப் இது போல தனது தடாலடி பாணியில் பேசுவதை ஒரு உத்தியாகவே கொண்டுள்ளார் என்று அவரை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டினர்.  

இதைப் போலவே,  பாகிஸ்தான் மீது 19% இறக்குமதி வரி விதித்து ட்ரம்ப் வெளியிட்ட மற்றொரு பதிவில், பாகிஸ்தானின் எண்ணெய் தொழிலில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யும் ,  “ யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கலாம்” என்று கிண்டலடித்திருந்தார். ( பாகிஸ்தானின் எண்ணெய் வளங்கள் இந்தியாவின் எண்ணெய் வளங்கள் அளவுக்குக் கூட பெரியவை அல்ல என்பது வேறு விஷயம்). 

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின்

ட்ரம்பின் இந்த கருத்துக்கு நாடாளுமன்றத்தில் மறைமுகமாக பதிலளித்த இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் , உலகப்பொருளாதாரங்களில் மிக அதிக வேகத்துடன் வளரும் பொருளாதாரம் இந்தியாதான்” என்று சுட்டிக்காட்டினார். 

ட்ரம்ப் அறிவிப்பின் உடனடி விளைவுகள் என்ன ? 

அமெரிக்கா இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக கூட்டாளி நாடு.  கடந்த ஆண்டு ( 2024-25) மட்டும் அமெரிக்காவுக்கு இந்தியா சுமார் 86.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.  அமெரிக்காவிடமிருந்து சுமார் 45.3 பிலியன் டாலர் பெறுமான பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது. 

இந்த வகையில் அமெரிக்காதான் தொடர்ந்து இந்தியாவின் முதல் வெளிநாட்டு வர்த்தக கூட்டாளி.  சீனா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 

ஆனால் ட்ரம்பின் இந்த அதிரடி அறிவிப்பால், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதிப் பொருட்களின் விலை உயரும்.  இதன் முதல் விளைவு

1) இந்தியப் பொருட்கள் மற்ற ( வரி குறைவாக விதிக்கப்பட்டுள்ள) போட்டி நாடுகளின் பொருட்களை விட அமெரிக்க சந்தையில் விலை அதிகமாகும். உதாரணமாக ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவுடன் போட்டியிடும் வியட்நாமுக்கு 20% வரி விதித்திருக்கிறார் ட்ரம்ப். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டியிடும் தன்மை பாதிக்கப்படும்.

2) அமெரிக்க நுகர்வோர்கள் இந்தியப் பொருட்களை வாங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.  

இந்தியாவின் ஏற்றுமதிகளில் முக்கியமானவை  ஜவுளி,  நகைகள், தங்கம், தகவல் தொழில் நுட்ப சேவைகள்,  விவசாய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள்  போன்றவை. 

இதில் மருந்துப் பொருட்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி இந்த புதிய வரி விகிதத்தால் தற்போதைக்குப்  பாதிக்கப்படாது. ஏனெனில் , இவைகளுக்கு அமெரிக்காவின் வர்த்தக சட்டம் பிரிவு 232ன் கீழ் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் 90 நாட்கள் விதி விலக்கு தந்திருந்தார்.  இந்த விதி விலக்கு வரும் ஆகஸ்ட் 14ம் தேதியோடு காலாவதியாகிறது.  அதற்குள் இந்திய தரப்பு அமெரிக்காவுடன் பேசி இந்த விதிவிலக்கை நீட்டித்தாக வேண்டும்.  

ஏற்றுமதி

இந்த புதிய வரி விகிதம் குறித்து வெளியிட்ட குறிப்பு ஒன்றில்,  இந்திய  வர்த்தக அமைச்சகம் இந்த புதிய வரிகள் பற்றி  இந்தியா அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து நடத்தும் என்றும், ஆனால் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்துக்காக தனது தேச நலனை விட்டுக்கொடுக்காது என்றும் கூறியது.  

ஆனால்  இந்த விதி விலக்கு நீட்டிக்கப்படாவிட்டாலும், இந்தியாவின் மின்னணு தொழில்நுட்ப தயாரிப்பாளர்களுக்கும், குறிப்பாக ஐபோன் உற்பத்தி செய்யும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது , ஏனெனில் ,  மற்றொரு மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி நாடான சீனா ஏற்கனவே இந்தியாவை விட அதிக வரிவிதிப்பை ( 30%) எதிர்கொண்டிருக்கிறது.  

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளித் தொழில் பொருட்கள், ஆயத்த ஆடைகள், தங்க நகைகள்  போன்றவை பெருமளவில் அந்நிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டித்தரும் விஷயங்கள்.  

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா இந்த இரு துறைகளின் மூலம் அமெரிக்காவிடம் இருந்து சுமார் 22 பில்லியன் டாலர்கள் அந்நிய செலாவணியை ஈட்டியிருக்கிறது. 

தமிழ்நாட்டின் திருப்பூர் போன்ற ஜவுளி/ஆயத்த ஆடை நகரங்கள்,  குஜராத்தின் சூரத் போன்ற வைர நகை தயாரிப்பு நிறுவன நகரங்கள் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால் பெரும் பாதிப்படையும். 

திருப்பூரிலிருந்தும் கோயம்புத்தூரில் இருந்து  மட்டும் கடந்த ஆண்டு சுமார் 45,000 கோடி ரூபாய் ( அமெரிக்க டாலர் 5.39 பில்லியன்)  பெறுமான ஆயத்த ஆடைகளும் இதர ஜவுளி பொருட்களும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளன. 

ட்ரம்ப்பின் அறிவிப்பின் பின் உள்ள உள்ளூர் அரசியல்

அமெரிக்க அதிபரின் இந்த அதிரடி வரி அறிவுப்புகளின் பின்னர் அவரது உள்ளூர் அரசியல் நிர்பந்தங்கள் இருக்கின்றன. 

Make America Great Again (MAGA) , அமெரிக்காவை மீண்டும் உச்சிக்கு கொண்டு செல்வோம் என்ற முழக்கத்துடன் தனது அரசியலை நடத்திக்கொண்டிருந்த  ட்ரம்ப் கடந்த நவம்பர் தேர்தலில் வென்று பதவிக்கு வருவதற்கு முன்பிருந்தே தனது பொருளாதார கொள்கையை கோடிட்டு காட்டித்தான் வந்தார்.  

பொருளாதாரம் உலக மயமான 90களிலிருந்து,  அமெரிக்காவின் தொழில் துறையில்  பொருட்கள் தயாரிப்பு ஆசியாவுக்கு சென்றது. அமெரிக்காவின் தொழிலாளர்களுக்கு பெரிய இழப்பு என்ற கருத்தை அவர் ஆதரித்து வந்தார். 

அது போல வர்த்தகத்திலும்,  அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய கடுமையான் இறக்குமதி வரிகளை விதிப்பதன் மூலம்,  பல நாடுகள் அமெரிக்காவின் தொழில்களுக்கு போட்டியிடும் தன்மையை குறைக்கின்றன என்பது அவரின் மற்றொரு புகார். 

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப்பின் இந்த முழக்கம் அவரது குடியரசு கட்சியின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினருக்கு – அதாவது உலக மயமாக்கலால் தொழில்கள் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்த காரணத்தால் வேலை வாய்ப்புகளை இழந்த உள்ளூர் தொழிலாளர்களுக்கு –  தேனாக இனித்தது. 

இந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ள பென்சில்வேனியா போன்ற அமெரிக்க மாகாணங்களில்தான் ட்ரம்ப் பெரு வெற்றி பெற்றார். 

சீனா போன்ற ஆசிய நாடுகளுக்கு சென்ற அமெரிக்க தொழில் நிறுவனங்களை மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டுவர ட்ரம்ப்பின் பிரயத்தனத்தின் ஒரு பகுதியாகவும் இத வரி விதிப்பு நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன. 

வெளிநாடுகளில் தயாரித்தால் குறைந்த செலவில் பொருட்களைத் தயாரித்து,  அதை செல்வந்த நாடுகளில் விற்பதன் மூலம் அதிக லாபம் ஈட்டும் அமெரிக்க நிறுவனங்களை,  இந்த வரி விதிப்பின் மூலம் லாபத்தில் அமெரிக்காவுக்குப் பங்கு கேட்கிறார் ட்ரம்ப்.  இந்த வரி விதிப்பு அமெரிக்க கஜானாவுக்கு சென்றடையும்.   இதை தன் “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” ( America First) என்ற முழக்கத்தின் வெற்றியாகக் காட்டலாம் என்பது அவரின் கணக்கு.

ஏற்றுமதி – இறக்குமதி இடைவெளி 

வர்த்தக பற்றாக்குறை ( Trade deficit)  ட்ரம்ப்பைப் பீடித்திருக்கும் மற்றொரு பிடிவாதம்.  

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதிலிருந்து பெறும் வருமானம்,  அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்வதை விட அதிகமாக இருந்தால் அது ட்ரம்பின் கண்களை உறுத்துகிறது. 

இந்தியா , சீனா போன்ற நாடுகளின் இந்த வர்த்தக சமநிலை அந்த நாடுகளுக்கு சாதகமாக இருப்பதால் அதை சரிக்கட்ட இந்த வரி விதிப்பை ஒரு முரட்டு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் ட்ரம்ப்.  

இந்தியாவைப் பொறுத்தவரை ட்ரம்ப் வெளிப்படையாகக் குறிப்பிடும் பல புகார்களில் முக்கியமானவை

1) இந்தியா மிக அதிக வரியை அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கிறது

2) இந்தியா வர்த்தகமல்லாத மற்ற கட்டுப்பாடுகளையும் ( non trade barriers) வைத்து அமெரிக்க நிறுவனங்களுக்கு சிக்கல் தருகிறது. 

3) அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவிடம் பெட்ரோலிய பொருட்களை இந்தியா இறக்குமதி செய்தது. 

இந்தக் குற்றச்சாட்டுகளில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றாலும், அதற்கான “தேசிய நலன்” சார்ந்த காரணங்கள் இருப்பதாக இந்தியா கூறுகிறது. 

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் – பரஸ்பர வரி

உதாரணத்துக்கு , இந்தியாவின் இறக்குமதி வரி என்பது பொதுவாக உலக வர்த்தக நிறுவனத்தின் வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறது என்றாலும், சில குறிப்பிட்ட துறைகளில் இறக்குமதி வரி அந்த வரம்பை மீறியிருக்கிறது.  இறக்குமதி செய்யப்படும் முழுமையாக வெளிநாடுகளில் கட்டிமுடிக்கப்பட்ட கார்கள் இந்தியாவில் 100 சதவீதம் வரை இறக்குமதி வரிக்கு உள்ளாகின்றன.   சில விவசாய உணவுப் பொருட்கள்  ( பால் பொருட்கள்,  ஆப்பிள்,  அரிசி போன்றவை)  30% லிருந்து 80% வரை இறக்குமதி வரிக்கு உள்ளாகின்றன.  

அதே போல வெளிநாட்டு மதுவகைகள் மீது இறக்குமதி வரி கடுமையாக விதிக்கப்படுகிறது.  சமீபத்தில்  இந்திய பிரிட்டிஷ் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு வரை ,  ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதி மீது, 150% வரி விதிக்கப்பட்டுவந்தது.  இது இப்போது 40% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

 வர்த்தகமல்லாத தடைச் சுவர்கள் 

வர்த்தகமல்லாத தடைகள் விஷயத்தைப் பொறுத்தவரை, இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து செய்யப்படும் இறக்குமதியில் அளவு உச்சவரம்பை விதிப்பது ( பருப்பு , பீன்ஸ் போன்ற விவசாய விளைபொருட்கள் மீது),  பால் பொருட்கள் மீது மதக் காரணங்கள் காட்டி அவைகள் விலங்குப் பொருட்களை தீவனமாகத் தரப்பட்ட கால்நடைகளிடமிருந்து பெறப்பட்டவை அல்ல என்று உத்தரவாதம் கேட்பது,  அமெரிக்க சமூக ஊடக கம்பெனிகள் மற்றும் டிஜிடல் கம்பெனிகளை அரசியல் காரணங்களுக்காக,  அந்த தளங்களில் பிரசுரித்த பதிவுகளை எடுக்கச் சொல்வது, மேலும் அந்தப் பதிவுகளுக்காக,  அந்த நிறுவன ஊழியர்களை கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ள வைப்பது போன்றவைகளை அமெரிக்கா சுட்டிக்காட்டுகிறது.  

பிரதமர் மோடி - டொனால்ட் ட்ரம்ப்
பிரதமர் மோடி – டொனால்ட் ட்ரம்ப்

ரஷ்யா எண்ணெய்ப் பிரச்சனை

ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்கிய விவகாரத்திலும் இந்தியா பெரிய அளவில் விட்டுக்கொடுக்கும் என்று தோன்றவில்லை.  

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த போரின் நியாய, தர்மங்கள் குறித்து மேற்குலகுக்கும், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.  

இந்தப் போரை அடுத்து அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை சந்தித்த ரஷ்யா, தான் உற்பத்தி செய்யும் எண்ணெயை மேற்குலகிற்கு விற்க முடியாமல்போன நிலையில்,  அதை குறைந்த விலைக்கு இந்தியா , சீனா போன்ற நாடுகளுக்கு விற்றது. 

இதை சந்தர்ப்பவாத வர்த்தகம் என்று சொல்லலாம், ஆனால் எண்ணெய் இறக்குமதி செய்தே உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய இந்தியா , சீனா போன்ற நாடுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.  குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை அவை வாங்கிக் கொண்டன. 

எனவே இந்த விஷயங்களில் இந்தியா இது வரை இதில் விட்டுக்கொடுக்கும் எந்த அறிகுறியையும் காட்டவில்லை. 

இந்த புதிய வரிவிகிதங்கள் இப்படியே நீடித்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சற்று பின்னடைவு ஏற்படும். 

அமெரிக்க வர்த்தகக் குழு ஒன்று இந்தியாவுக்கு இந்த மாதம் வர இருக்கும் சூழலில், இந்த வரி விகிதப் பிரச்சனை மீண்டும் விவாதிக்கப்பட்டு இரு தரப்புகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை இந்தியாவில் இருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *