
நீளமான கூந்தல் ஆசையெல்லாம் இந்தக்கால பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு இல்லையென்றே சொல்லலாம். ஆனால், தோள்பட்டை அளவுக்கு தலைமுடி இருந்தாலும், அது ஆரோக்கியமாக இருக்க எல்லோருமே ஆசைப்படுகிறோம். இதற்காக இங்கே 5 டிப்ஸ் கொடுத்திருக்கிறார் அழகுக்கலை நிபுணர் உஷா.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து டபுள் பாய்லிங் முறையில் லேசாகச் சூடாக்கவும். கறிவேப்பிலைப் பொடி, நெல்லிக்காய்பொடி, மருதாணிப் பொடி மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு, அடுப்பை அணைத்துவிடவும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி, மசாஜ் செய்யவும். பின்னர், வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலைக்கு ஒத்தடம் கொடுத்து, பிறகு கூந்தலை அலசவும். இது வறட்சியையும் பொடுகையும் நீக்கி, கூந்தலை மிருதுவாக்கும்.
ஒரு மூடி தேங்காயை அரைத்துப் பால் எடுத்துக்கொள்ளவும். அதில் கற்றாழையின் சதைப்பகுதி அல்லது வாசனையோ, கெமிக்கலோ கலக்காத கற்றாழை ஜெல் கலந்துகொள்ளவும். கூந்தலைச் சிறு பகுதிகளாகப் பிரித்து இந்தக் கலவையைத் தடவி, வட்டமாக மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசினால் வேர்க்கால்கள் பலப்படும். வறட்சியும் பொடுகும் நீங்கும்.

சம அளவு பாதாம் எண்ணெயும் நெல்லிக்காய்ச் சாறும் கலந்துகொள்ளவும். கூந்தலைப் பகுதிகளாகப் பிரித்து இந்தக் கலவையைத் தடவி, மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊறவைத்து அலசவும். இது கூந்தலுக்கு அழகான தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் தரும்.
இரண்டு கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். இது பொடுகை விரட்டும்.
முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி, ஊறவைத்துக் குளிக்கவும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலை வலுப்படுத்தும் சிகிச்சை இது.
இந்த டிப்ஸில் ஒன்று அல்லது இரண்டை வாரத்துக்கு ஒருநாள் ஃபாலோ செய்தால்கூட, கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…