
திரைக் கலைஞர்களுக்கு மத்திய அரசின் 71-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில், சிறந்த நடிகருக்கான விருது `12th Fail’ திரைப்படத்திற்காக நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிக்கும், ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக் கானுக்கும் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட நன்றி தெரிவித்த ஷாருக் கான், “மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறேன். தேசிய விருதுடன் கௌரவிக்கப்படுவது என்பது என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியான தருணம்.
தேர்வுக்குழுவினர், தேர்வுக்குழு சேர்மன், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு நன்றி. என்னுடைய இயக்குநர்களுக்கு நன்றி.
குறிப்பாக ஜவானில் என் மீது நம்பிக்கை வைத்த அட்லீ சார் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.
அட்லீ சார் உங்கள மாதிரி சொன்னா `இதுவொரு மாஸ்’. தேசிய விருது என்பது வெறும் சாதனை மட்டுமல்ல.
இது தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும், சினிமாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்கிறது.” என்று கூறினார்.
ஷாருக் கானுக்கு ஐந்தாண்டு (2018) நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம், உலக அளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து அவரது ரீ-என்ட்ரியை மிகப்பெரும் திருப்புமுனையாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் பார்க்கிங் படம் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என மூன்று தேசிய விருதுகளை வென்று அசத்தியது.