
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப், `கூடுதல் வரி விதிப்பு’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து, உலக நாடுகளை மிரட்டிவருகிறார். வர்த்தக ஒப்பந்தம் என்ற ஒன்றின் மூலம் பிறநாடுகளைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
ஏற்கெனவே இந்தியா – பாகிஸ்தான் விவகாரங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணிந்து செல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைன் போரைக் காரணமாக வைத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம், உக்ரைன் மீதான போருக்கு தேவையான நிதி ஆதாரத்தை வழங்குகிறது. எனவே, ரஷ்யா உக்ரைனுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால், ரஷ்யாவிடம் எண்ணெய்வாங்கும் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி விதிப்பேன். ரஷ்யாவுடன் உறவு வைத்துள்ள நாடுகளுக்கும் கூடுதல் வரி விதிப்போம்” என ஜூலை 14 அன்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் உருவான நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டோவும், “ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கோள்ளும் நாடுகள் தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்” என ஜூலை 17 அன்று எச்சரித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “இந்தியா ரஷ்யாவிடம் மட்டுமின்றி, பிற நாடுகளிடமிருந்தும் எண்ணெய் வாங்குகிறது. எனவே, நமக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபி, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “இந்தியா நட்பு நாடு தான். அதற்காக அவர்களின் எல்லா செயல்களுக்கும் 100 சதவிகிதம் ஒத்துப் போகவேண்டுமென்றில்லை.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிச்சயமாக அமெரிக்காவை எரிச்சலூட்டும் செயல்” என அமெரிக்கா அரசின் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், அதிபர் ட்ரம்ப் “இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது, ஆகஸ்ட் 1 முதல் 25 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும். அத்துடன் ரஷ்யா உடனான வர்த்தகத்திற்காக இந்தியாவுக்கு அபராதமும் விதிக்கப்படும்” என்று புதன்கிழமையன்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து தன் சமூக ஊடகப் பக்கத்தில், “இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் செத்துப்போன பொருளாதாரங்களுடன் ஒன்றாக வீழ்ச்சியடையட்டும்…” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நிறுத்தியிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, “இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், மங்களூர் சுத்திகரிப்பு பெட்ரோகெமிக்கல் லிமிடெட் ஆகியவை கடந்த ஒரு வாரமாக ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில்,“இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதைத்தான் நான் கேள்விப்பட்டேன். அது சரியா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியா எடுத்திருக்கும் இந்த முடிவு ஒரு நல்ல முன்னேற்றம்.

என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” எனத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 35 சதவிகிதம் வரை ரஷ்யாவில் இருந்து வருகிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை மோடி தலைமையிலான பாஜக அரசு நிறுத்தியுள்ளதாக வெளியாகும் தகவலால் இந்தியாவில் எரிபொருட்களின் விலை உயருமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.