
மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.
“அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே” என்ற கேள்விக்கு,
“அவர் அதிமுக கூட்டணியில் எங்கே இருந்தார்” என்றார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு,
“கூட்டணி என்பது இறுதிக்கட்டத்தில்தான் முடிவாகும். திமுக, அதிமுக-வில் அப்படித்தான் எப்போதும் நடக்கும். வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணியை அதிமுக பயன்படுத்தி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். மக்கள் கடல் அலை போல திரண்டு வருகின்றனர். மக்கள் கடலில் எடப்பாடி பழனிசாமி நீந்தி வருகிறார்.
2026-ல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவது உறுதியாகிவிட்டது. கிராமப்புறங்களில் கூட மக்கள் எழுச்சிகரமான வரவேற்பு கொடுக்கிறார்கள். அதிமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும், முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
பாஜகவோடு கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரிய பெரிய கட்சிகளோடு பேசுகிறோம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனக் கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார்.

1967-ல் நடைபெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், சுதந்திரக் கட்சி உள்ளிட்ட முரண்பாடான கட்சிகள் கூட்டணி அமைத்தனர். அதுபோல தேர்தல் நேரத்தில்தான் எல்லாமே முடிவாகும். சீட் பேரம், தொகுதி ஒதுக்கீடு என எல்லாமே உள்ளது. தேர்தல் நேரத்தில் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் போகலாம், கூட்டணி மாறலாம், இப்படி நிறைய விஷயங்கள் உள்ளது.” என்றவரிடம்,
“முதல்வரை ஓபிஎஸ் சந்தித்துள்ளாரே” என்ற கேள்விக்கு,
“ஓபிஎஸ் முதல்வரை எத்தனை முறை பார்த்தாலும் அது அவருடைய கொள்கை, மரியாதை நிமித்தமாக தான் சந்தித்து இருப்பார்.” என்றார்.