
கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில் வராத 30 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கொப்பாள் மாவட்டத்தில் பணியாற்றிய கலகப்பா நிடகுண்டி என்ற நபர் மாதம் ரூ.15,000 சம்பளம் பெற்றுள்ளார். அவருக்கு சொந்தமாக 24 வீடுகள், 4 வீட்டு மனைகள் மற்றும் 40 ஏக்கர் விளைநிலம் இருந்துள்ளது.
சொத்துக்கள் அனைத்தும் அவரது பெயரிலும், அவரது மனைவி மற்றும் சகோதரர் பெயரிலும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4 வாகனங்கள், 350 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கலகப்பா, முன்னாள் KRIDL பொறியாளர் ZM சின்சோல்கர் என்பவருடன் இணைந்து, 96 முழுமையடையாத திட்டங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து ₹72 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாகக் கூறப்படுகிறது.
லோகாயுக்தா அதிகாரிகளின் அதிரடி!
வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், லோக் ஆயுக்தா புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை, ஹாசன், சிக்கபாளபுரா, சித்ரதுர்கா மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் 5 அரசு அதிகாரிகளின் சொத்துகள் மீது சோதனையிட்டனர்.
ஜூலை 23 அன்று, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி உட்பட எட்டு அதிகாரிகளுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, ₹37.42 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டனர்.
வசந்தி அமர் ஐஏஎஸ் மீதான சோதனை!
முக்கியமாக வசந்தி அமர் பி.வி. என்ற ஐஏஎஸ் அதிகாரி தொடர்புடைய இடங்களில் சோதனையிட்டனர். இவர் கர்நாடகாவின் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான K-RIDE-இல் சிறப்பு துணை ஆணையராக பணியாற்றினார்.
பெங்களூரு புறநகர் ரயில்வே திட்டத்திற்கான (BSRP) நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்மீது நடத்தப்பட்ட சோதனையில் ₹7.4 கோடி மதிப்புள்ள விவசாய நிலம், ₹12 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள், ₹90 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் உள்ளிட்ட ₹9.3 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.