• July 31, 2025
  • NewsEditor
  • 0

வைகோ-வுக்கும், மல்லை சத்யா-வுக்கும் இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில் மல்லை சத்யா அறிக்கை ஒன்றை வெளியிட்திருக்கிறார்.

மறுமலர்ச்சி விலகி மகன் திமுக

அவர், ” உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க 02.08.25 சனிக்கிழமை சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள சிவானந்த சாலையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப் போராட்டம் நடக்க உள்ளது.

உயர்ந்த இலட்சியங்களை தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் வென்றெடுக்க நொச்சிப் பட்டி தண்டபாணி, இடி மழை உதயன், மேலப்பாளையம் ஜெகாங்கீர், உப்புளியப்புரம் வீரப்பன், கோவை காமரசபுரம் பாலன், ஆகியோர் தங்கள் உயிர்களை ஈகம் செய்து 06/05/1994 தொடங்கப் பட்ட இயக்கம் மதிமுக.

ஆனால் இன்று, மாயமானை நம்பி மண் குதிர் நம்பி பயணித்த கதையாகி, தீக்குளித்த தியாகிகளின் ஈகம் வீணாகி மறுமலர்ச்சி விலகி மகன் திமுக என்று திரிபு வாத இயக்கமாக சுருங்கிப் போனது துரதிருஷ்டம்.

வைகோ

எதேச்சாதிகார போக்கில் துரோகப் பட்டம்

தலைவர் வைகோ அவர்கள் தன்னை நம்பி வந்த லட்சியவாதிகளை கொள்கைவாதிகளை தனிப் பெரும் ஆளுமைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்காமல் எதேச்சாதிகார போக்கில் துரோகப் பட்டத்தை சுமத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து வெளியேற்றி வந்தார். காரணம் அவர் மட்டுமே அறிந்தது, இப்போதுதான் நாடு உணர்ந்து உள்ளது.

இதோ அந்த வரிசையில் என் வாழ்வின் பெரும் பகுதி, 32 ஆண்டுகள்… ஆண்டுக்கு 50 ஆயிரம் கிலோமீட்டர் வாகனப் பயணம் செய்து கிழக்கும் மேற்குமாக வடக்கும் தெற்குமாக கழகத் தோழர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்றது தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளை வென்றெடுக்க தலைவர் வைகோ அவர்களின் சேனாதிபதியாக இருந்து ஈழத் தமிழர் இனப்பிரச்னை, முல்லைப் பெரியாறு 999 அணை, கல்பாக்கம் அணு உலை, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்று இங்கிலாந்து தூதரகம் முற்றுகை, சிங்கள இராணுவ வீரர்களுக்கு தாம்பரம் விமானப்படை தளத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை பயிற்சி, ராஜபக்சே திருப்பதி வருகையை கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் என்று போராடி 32 வழக்குகளை எதிர் கொண்டு ஐந்து முறை சிறை சென்று கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கம் என்று எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வெற்றிக் கொடி நாட்டினேனோ… இன்று அதே கட்சியில் தலைவர் வைகோ அவர்கள் என்னை துரோகி என்று சொல்லி களங்படுத்தி அரசியலில் இருந்து துடைத்தெறிய துரோகி என்று சொன்னதோடு அல்லாமல் தன் சகாக்களை கொண்டு நரகல் நடையில் அவதூறு பிரசாரம் செய்து காயப்படுத்துகின்றார்.

மாவோ

காடுகளுக்கு ஊடே சென்றேன், கொடும் விளங்குகளை எதிர் கொண்டேன், சிறு கீறல்கள் கூட இல்லாமல் திரும்பி நாட்டுக்குள் நுழைந்தேன். சகமனிதர்களை சந்தித்தேன். இதோ காயங்களோடும் கண்ணீரோடும் சென்று கொண்டு இருக்கின்றேன் என்ற சீனாவின் மக்கள் தலைவர் மாவோவின் பொன்மொழிகள் என் நினைவலைகளில் வந்து செல்கின்றார்.

அன்பின் தோழமைகளே

தலைவர் வைகோ அவர்கள் ஒரு உண்மையான ஜனநாயக வாதியாக இருந்து இருப்பரானால், என் மீது தவறு இருக்கும் பட்சத்தில் என்னை தனியே அழைத்து பேசி இருக்கலாம். மாறாக நேரடியாக நிர்வாகக் குழு கூட்டத்தில் காட்சி ஊடகத்தில் பேசிய காரணத்தால் தற்போது மக்கள் மன்றத்தில் நான் நீதி கேட்டு போராட்டக் களத்திற்கு வந்து இருக்கின்றேன்.

மல்லை சத்யா
மல்லை சத்யா

அவர் எப்போது தன் மகன் துரையின் அரசியலுக்காக என்மீது அபாண்டமான தீராத துரோகப் பழியை சுமத்தினரோ அப்போதே புரிந்து விட்டது இவர் எந்த எந்த எல்லைக்கும் செல்வார் என்பது. எந்த ஒரு அரசோ அல்லது நிர்வாகமோ யாரைப் பயங்கரவாதி யாரை துரோகி என்று சொல்கிறதோ அவனே உண்மையான போராளி, உண்மையான ஊழியன் என்பது பொது சிந்தனை. போராட்ட உணர்வும் போர் குணமும் இல்லாத தன் மகன் துரைக்காக வழக்கு, சிறை என்று போராட்டங்கள் நிறைந்த களநாயகனாக விளங்கிய என்மீது அபாண்டமான துரோகி பட்டத்தை சுமத்தி பழிக்கு ஆளாகி கேள்விகளின் நாயகனாக தமிழக அரசியலில் போய்விட்டார் தலைவர் வைகோ அவர்கள் அவரின் நிலைக்காக அவரின் சேனாதிபதியாக இருந்த நான் வருந்துகிறேன்.

திருக்குறள்

பற்றுக பற்றற்றான் பற்றினை என்றார் வள்ளுவர்

தலைவர் என்பவர் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவறாக இருக்க வேண்டும் பற்றில்லாதவரை மக்கள் பற்றிக் கொள்வார்கள். அப்படி ஒரு தலைவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்து இருக்கின்றார் என்று நம்பி இருந்தேன். ஆனால் தலைவர் வைகோ அவர்கள் தன் மகன் துரையின் அரசியலுக்காக முறையாக முன்னறிவிப்பு செய்யாமல் திடீரென்று துரை அரசியலுக்கு வரவேண்டுமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தி உட்கட்சி ஜனநாயக படுகொலையை அரங்கேற்றினாரோ அப்போதே என் நம்பிக்கை பொய்த்துப் போனது.

புகழ்ச்சி

வாழ்வது என்றாலும் வீழ்வது என்றாலும் தலைவர் வைகோ ஒருவருக்காக மட்டுமே வாழ்வேன். அவர் ஒருவருக்கு மட்டுமே வீழ்வேன் என்று நான் பேசும் போது கைதட்டி ஆர்ப்பரித்து நிற்பீர்கள். துரை வந்தபின்னர் அதில் துரையின் பெயரையும் சேர்த்துக் கொள்ள சிலர் சொன்னார்கள்.

தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடித்தால் தான் பயனடைய முடியும் என்று ஆலோசனை வழங்கினார்கள். அந்த தலைவனுக்கு நிகர் வைக்கும் அளவிற்கு துரை இல்லை. அப்படி இருக்க நான் எப்படி அவரை புகழ்ந்து பேச முடியும். அதனால் என்னைப் பிழைக்கத் தெரியாதவன் என்றார்கள் பரவாயில்லை என்றேன்.

வைகோ
வைகோ

டயோஜனிஸ்

கிரேக்கத்தின் புகழ்பெற்ற தத்துவஞானி டயோஜனிஸ் சூப் தயாரிக்க அவரை விதைகளை கழுவிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கிரேக்க அறிஞர் அரிஸ்டிபஸ் சொன்னார் டயோஜனிஸ் உங்களுக்கு இருக்கும் அறிவிற்கும் ஆற்றலுக்கும் ஆளுமை பண்பிற்கும் நீங்கள் மட்டும் என்னைப் போன்று இளவரசரை புகழ்ந்து துதி பாடி இருந்தால், இந்தமாதிரி சூப் தயாரிக்க அவரை விதைகளை கழுவ வேண்டி இருக்காதே என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னபோது டயோஜனிஸ் அலட்சியமாக சிரித்துக் கொண்டே சொன்னார், `அரிஸ்டிபஸ் நீ என்னைப் போன்று அவரை சூப் குடிப்பதற்கு பழகி இருந்தால் இளவரசருக்கு அதிகார வர்க்கத்திற்கு துதி பாடும் அவலம் ஏற்பட்டு இருக்காதே’ என்று கண்ணத்தில் அடித்தார் போன்று சொன்னார். நான் டயோஜனிஸ் அளவிற்கு என்னை நினைத்துக் கொண்டதாக கருதவேண்டாம். படித்தது நினைவுக்கு வந்தது அவ்வளவுதான்.

பட்டினிப் போராட்டம்

புரட்சியின் திறவுகோல் பட்டினி. இதை அரசியல் பாலபாடம் அறியாதவர்களுக்கு தெரியாது. நீதி கேட்டு நடைபெறும் உண்ணா நிலை போராட்டத்தில் பங்கேற்க வாருங்கள். உங்கள் வாழ்த்தைத் தாருங்கள். காத்திருப்பேன் உங்கள் திருமுகம் காண அது தான் காயம்பட்ட நம் இதயத்திற்கு மருந்து.

வாருங்கள்

கழகத்திற்காக ஒடி ஒடி உழைத்து களைத்துப் போனவர்களே வாருங்கள். தலைவர் வைகோ அவர்களால் கைவிடப் பட்டவர்களே வாருங்கள். அழுதால் நிம்மதி என்று இருளில் சாய்பவர்களே வாருங்கள். இருளில் விளக்கைத் தொலைத்துவிட்டு வெளிச்சத்தை தேடுபவர்களே வாருங்கள். இளைப்பாறுதல் எங்கே கிடைக்கும் என்று சுமைதாங்கியை தேடுபவர்களே வாருங்கள். நடுக்கடலில் ஒடத்தைத் தொலைத்தவர்களே வாருங்கள். கடல் நீரில் தடம் அறிந்தவன் அழைக்கின்றேன் வாருங்கள். நாம் பட்ட காயங்களுக்கு பட்டினி போராட்டத்தின் மூலம் நாமே மருந்து தடவிக் கொள்வோம். தமிழ் நாட்டு அரசியலில் அழுத்தமாக தடம் பதித்த நம் தடத்தை எவராலும் அழிக்க முடியாது என்பதை நிருபித்திடுவோம்.

தலைவர் வைகோ அவர்கள் தன் மகன் துரையின் அரசியலுக்காக கடந்த 09-07-25 புதன்கிழமை அன்று ஊடகம் வாயிலாக துரோகப் பழியை சுமத்தி மூட்டிய இந்த நெருப்பு வேள்வியில் வெற்றி பெற முடியுமா என்று நினைக்க வேண்டாம். தடை கற்கள் உண்டென்றால் தடந்தோள் உண்டு என்றார் பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியை இதயத்தில் ஏந்துவோம் எல்லா நெடும் பயணங்களும் ஓர் அடியில் தொடங்கி வெற்றிவாகை சூடியுள்ளது நிலத்தில் காலூன்றி வானத்தை தொடும் காலம் இது..

என்னை துரோகி என்று சொன்ன தலைவர் வைகோ அவர்கள் சாதாரண மனிதர் அல்ல. அவர் மாமனிதர் அவர் எப்படிப் பட்டவர் அவர் என்ன செய்வார் என்றும் தெரியும் அவர் என்மீது சுமத்திய பழியை நாடு நம்பவில்லை. நல்லோர் ஏற்கவில்லை நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என்ற முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரனைப் போன்று நடுநிலையாளர்கள் துலாக் கோளில் நிறுத்தி என்னை நிரபராதி என்று விடுவித்து வாழ்த்துக் கூறுகின்றார்கள்.

தலைவனா தொண்டனா என்று வரும் போது தலைவர் பக்கமே நின்று பழக்கப்பட்ட பொது சமூகம் முதல் முறையாக ஒரு தொண்டனின் பக்கம் நின்று இருப்பதை நாடு பார்த்துக் கொண்டு இருக்கிறது.

மல்லை சத்யா
மல்லை சத்யா

முதல் வெற்றி தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் இலட்சிய சுடரை ஏந்துவோம் தலைமுறை கோடி கண்ட தமிழின உணர்வைப் பட்டுப் போகாமல் பாதுகாப்போம் உட்கட்சி ஜனநாயக படுகொலைக்கு நீதி கேட்போம்.

இன்னும் இரண்டு நாட்களே இடையில் உள்ளது பாதுகாப்பாக வாருங்கள் காத்திருப்பேன்.

உங்கள் திருமுகம் காண

மகிழ்ச்சி வெல்வோம்

வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை

என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *