
My TVK
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ‘My TVK’ என்கிற ஆப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் நடந்திருந்தது. நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியவை.
பதில் சொல்லும் நாள் இது
அவர் பேசியதாவது, ‘தமிழக வெற்றிக்கழகத்துக்கு மக்கள் கூட்டம் இருக்கிறது. கட்டமைப்பு இருக்கிறதா? என கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நாள் இது. சாமானியர்களை கோட்டைக்கு அனுப்பவே தலைவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அண்ணா செய்த புரட்சியை இப்போது தலைவர் செய்து கொண்டிருக்கிறார். அண்ணா சொன்னதைப் போல மக்களிடம் செல், மக்களிடம் வாழ்.
‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’
இனி மொபைல் போன் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கப் போகிறது. ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர்களை சேர்க்கப்போகிறோம். 2 கோடி பேரை கட்சியில் இணைக்க வேண்டும். ஒரே நொடியில் 18,000 பேர் இணையும் அளவுக்கு பலம் கொண்ட இணையதளத்தை உருவாக்கியிருக்கிறோம். MY TVK ஆப் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் இணைய வேண்டும். நிர்வாகிகள் வீடு வீடாக செல்லும்போது லொகேஷனை ஆன் செய்ய வேண்டும்.

எந்த தொகுதியில் எந்த பிரச்சனை என்றாலும் ஆப்பில் பதிவு செய்தால் தலைவரே நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேச முடியும். பூத் கமிட்டி உறுப்பினர்களிடமும், கிளை நிர்வாகிகளிடமும் தலைவரே ஆப் மூலம் நேரடியாக பேசுவார். அவர் முதல் ஆளாக ஆப்பை டவுண்லோடு செய்துவிட்டார். 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து 5 கோடி மக்களை நாம் சென்று சேர வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஓடிபி கேட்காமல் உறுப்பினர் சேர்க்கையை நடத்தப் போகிறோம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் ஆப் மூலம் கண்காணிப்போம். பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட தலைவருடன் நேரில் பேச முடியும் என்கிற கட்சி நம்முடைய கட்சி மட்டும்தான். அக்டோபர் – நவம்பருக்குள் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 2 கோடி நம்முடைய இலக்கு அல்ல. அடுத்தக்கட்டமாக 5 கோடி பேரை இணைக்க வேண்டும்.’ என்றார்.