• July 29, 2025
  • NewsEditor
  • 0

காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 29- ம் தேதி, சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பு மற்றும் அவசியம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை அடர்த்தி மிகுந்த பகுதியாக இருக்கிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். தமிழ்நாட்டின் முதுமலை & சத்தியமங்கலம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் மற்றும் கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பகுதியே வங்கப் புலிகளின் சொர்க்கமாக விளங்கி வருகிறது.

முதுமலையில் புலிகள் தினம்

தொடர்ந்து நடைபெற்று வரும் பிரத்யேக புலிகள் கணக்கெடுப்பின்படி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வேட்டை, வாழிட போதாமை, மனித தவறுகள் போன்ற பல்வேறு காரணங்களால் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் தேசிய விலங்கான வங்கப் புலிகளின் எண்ணிக்கை உயர்வு சற்று நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்திருக்கிறது.

இது குறித்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வனத்துறையின் உயர் அதிகாரிகள் , ” 1940 – ம் ஆண்டு இந்தியாவின் முதல் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் தற்போது ஒரு செழிப்பான புலிகள் காப்பகமாக விளங்குகிறது. நீலகிரி உயிர் கோள காப்பகத்தின் உயிர் நாடியாக இருந்து வரும் முதுமலை புலிகள் காப்பகத்தில் 2024-25 – ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 165 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2023- 24- ம் ஆண்டுகளில் புலிகளின் 129 ஆக இருந்தது. தற்போது 165 ஆக உயர்ந்திருக்கிறது. இது 28 சதவிகித உயர்வாகும்.

முதுமலையில் புலிகள் தினம்

வேட்டைத் தடுப்பு காவலர்களின் அர்ப்பணிப்பு முதல் அந்நிய களை தாவரங்களின் அகற்றம் வரை ஒட்டுமொத்த காரணங்களும் இதனை சாத்தியமாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக புலிகள் அடர்த்தி கொண்ட பகுதியாக விளங்கும் முதுமலை, கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையில் வனவிலங்கு பரவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. புலிகள் மட்டுமன்றி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 131 சிறுத்தைகள், 534 யானைகள், 19 வரிக்கழுதைப் புலிகள், அரியவகை பிணந்தின்னி கழுகுகளின் தாய் மடியாக அரவணைத்து வருகின்றன” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *