
புதுடெல்லி: "ஆபரேஷன் சிந்தூர் மூலம் அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அதோடு, பாகிஸ்தானின் பல விமானப் படைத் தளங்கள் இப்போது வரை ஐசியுவில் உள்ளன" என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: “ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்தது கொடுமையின் உச்சம். அப்பாவி மக்களிடம் அவர்களின் மதம் என்ன என்று கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றார்கள். இது இந்தியாவை, வன்முறை எனும் நெருப்பில் தள்ளுவதற்கான திட்டமிட்ட சதி. இது இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட சதி. இந்த சதியை நாடு ஒற்றுமையுடன் முறியடித்ததற்காக நாட்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.