• July 29, 2025
  • NewsEditor
  • 0

தென் அமெரிக்க நாடான பெரு தன் 204-வது விடுதலை நாளை கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் பெரு நாட்டின் சுதந்திர தினம் சென்னையிலும் கொண்டாடப்பட்டது.

சுரங்கம், ஆட்டோமொபைல், தகவல் தொடர்பு துறை, விவசாயம் ஆகிய துறைகளில் இந்தியா – பெரு ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

1963 ம் ஆண்டு முதலே இந்தியாவுக்கும் பெருநாட்டுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தென் அமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகளை மட்டும் கணக்கில் கொண்டால் இருநாடுகளுக்கான வர்த்தகத்தில் பெரு, மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அதாவது 2019-20 ஆண்டில் 234 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த இரு நாட்டு வர்த்தகம் 2023-24 ஆண்டு 403 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். “தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருநாடுகளுக்கு இடையே தற்போது தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் மரபுசார சக்தியினால் இயங்கக்கூடிய வாகனங்கள் துறை, மருத்துவ துறை, மின்னியல் தொழில்நுட்பம் என பல துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையே வர்த்தம் மேலும் மேம்படும்” என்றார் பெருநாட்டின் கெளரவ தூதராகச் செயல்படும் TVS Supply Chain Solutions தினேஷ்.

இவ்விழாவில் கலந்து கொண்ட பெருநாட்டின் தூதரான Javier Manuel Paulinich Velarde பேசுகையில், “பெரு நாட்டின் சுதந்திர தினம் முதன்முதலாக சென்னையில் கொண்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவுடன் குறிப்பாக தொழில் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டுடன் வர்த்தகம் மற்றும் பண்பாட்டு உறவுகளை மேம்படுத்திக்கொள்ள பெரு ஆர்வமாக இருக்கிறது” என்றார்.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் உட்பட பல நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *